இலங்கை இராணுவம் குண்டு மழை பொழிகிறது. இந்த நிலைமைக்கு யார் காரணம்? நிச்சயம் கருணாநிதிதான்: ஜெயலலிதா

கச்சதீவை இலங்கை அரசு புனிதப் பகுதியாக அறிவிக்கப்போவது குறித்து நான் விடுத்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் ஓர் அறிக்கையை முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் 21.8.1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கச்சதீவு குறித்து தான் தீர்மானத்தை முன்மொழிந்ததாக கூறியிருக்கிறார். ஆனால் 26.6.1974 அன்றே கச்சதீவு அப்போதைய மத்திய அரசால் இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது.

கருணாநிதியால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தில், இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது என்று குறிப்பிட்டிருக்கிறது.

இந்த தீர்மானத்தைப் படித்துப் பார்த்தாலே, ஏதோ சம்பிரதாயத்திற்காக, சமாதானத் தொனியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் போல் தான் இருக்கிறதே தவிர, இழந்த உரிமையை மீட்கக்கூடிய போராட்டத்தொனியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் போல் இல்லை என்பதை அறிவார்ந்த மக்கள் எளிதில் அறிந்து கொள்வார்கள்.

21.8.1974 அன்று முன் மொழியப்பட்ட தீர்மானத்தின் மீது உரையாற்றிய அப் போதைய முதலமைச்சர் கருணாநிதி, 1974 ஆம் ஆண்டு ஜூன் 27-ந்தேதி திடீரென்று அறிவிப்பு வந்தது. இப்போதும் சொல்கிறேன். இதுபற்றி எந்தவிதமான சூசகமான தகவலையும் இந்த அரசுக்கு அறிவிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

ஆனால் 19.7.2008 அன்று தி.மு.க. சார்பில் உண்ணாவிரதத்தை தொடக்கி வைத்து பேசிய கருணாநிதி நடைபெற்ற ஒவ்வொரு பேச்சுவார்த்தையிலும் இந்தியா கச்சதீவை விட்டுத்தருவது கூடாது என்ற கருத்து தமிழக அரசின் சார்பாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்று 21.8.1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானத்தின் மீது பேசியதாக கூறியிருக்கிறார்.

மேற்படி கூற்றில் இருந்தே கச்சதீவை தாரை வார்க்க இந்தியா தயாராகி விட்டது என்பது முன் கூட்டியே கருணாநிதிக்கு தெரிந்திருப்பது தெள்ளத் தெளிவாகிறது. நேற்றைய அறிக்கையில் அது மறைக்கப்பட்டிருக்கிறது.

அடுத்தபடியாக, 1976-ல் இந்திய நாட்டில் அமுலில் இருந்த நெருக்கடி காலத்தில், மக்களை கலந்தாலோசிக்காமல் இலங்கை அரசுடன் செய்து கொண்ட மற்றொரு ஒப்பந்தத்தின் மூலம், இந்திய மீனவர்களுக்கு கச்சதீவின் அருகில் மீன்பிடிக்கும் உரிமையும் விட்டுக்கொடுக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார் கருணாநிதி.

1974 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பே, இதை எதிர்த்து ஒரு நாடு தழுவிய போராட்டத்தை கருணாநிதி நடத்தி, மத்திய அரசுக்கு எச்சரிக்கை கொடுத்திருப்பாரேயானால், 1974-ஆம் ஆண்டு ஒப்பந்தமே நிச்சயமாக ஏற்பட்டிருக்காது. ஆனால் அதை கருணாநிதி செய்யவில்லை.

இதன் விளைவாக இருக்கிற உரிமைகளையும் தாரை வார்த்து 1976 ஆம் ஆண்டு மீண்டும் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. எனவே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இரு இந்திய-இலங்கை ஒப்பந்தங்களுக்கும் கருணாநிதி தான் மூலக்காரணம் என்பதை தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.

இலங்கைத்தமிழர்களை அழிப்பதற்காக இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு ஆயுதங்களையும், நவீன போர்க்கருவிகளையும் வழங்கியதையும், இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் இராணுவப்பயிற்சி அளிக்கப்பட்டதையும் நான் சுட்டிக்காட்டிய போது, இதெல்லாம் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம், இது குறித்தெல்லாம் மாநில அரசை மத்திய அரசு கலந்தாலோசிக்காது என்று சொன்னவர்தான் கருணாநிதி.

“காவேரி நதிநீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்கத்தவறியது”, “காவேரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கை திரும்பப்பெற்றது”, “கச்சதீவை தாரை வார்த்தது”, என தமிழர்களின் உரிமைகள் பறிபோனதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தான் என்பதை மக்களுக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

காவேரி நடுவர் மன்ற தீர்ப்பின் இடைக்கால ஆணையினை மத்திய அரசிதழில் வெளியிட நான் நடவடிக்கை எடுத்தேன். உச்ச நீதிமன்றத்தில் நல்ல வழக்கறிஞர்களை வைத்து வாதாடி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்துவதற்கான தீர்ப்பைப் பெற்றுத்தந்தேன். ஆனால் காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்தாரா?

கடைசியாக இலங்கைத்தமிழர் மீதும், கச்சதீவு மீதும் எனக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று வினவியிருக்கிறார் கருணாநிதி. தமிழ்நாட்டில் பத்து ஆண்டு காலம் முதலமைச்சராக பதவி வகித்த எனக்கு, தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எனக்கு ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மிகப் பெரிய கட்சியின் பொதுச் செயலாளராகிய எனக்கு நிச்சயமாக இலங்கைத் தமிழர்கள் உட்பட அனைத்து தமிழர்கள் மீதும், தமிழர்களின் உரிமைகளை மீட்பதிலும் அக்கறை உண்டு.

இலங்கைத் தமிழர்களை அழிக்க இலங்கை இராணுவத்தின் ஆயுதங்களையும், நவீன சாதனங்களையும் அளிக்க உறுதுணையாக இருந்தேனா? இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் மத்திய அரசு இலங்கை இராணுவத்திற்கு உதவி செய்ததைக் கண்டித்து கருணாநிதி ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றிருப்பாரேயானால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கவிழ்ந்திருக்கும். தமிழர்கள் அழிக்கப்பட்டிருக்கமாட்டார்கள்.

ஆனால் இன்று இலங்கையில் என்ன நிலைமை? அப்பாவித்தமிழர்கள் மீது இலங்கை இராணுவம் குண்டு மழை பொழிகிறது. இந்த நிலைமைக்கு யார் காரணம்? நிச்சயம் கருணாநிதிதான். இதை யாராலும் மறுக்க முடியாது.

இன்று பிரிட்டிஷ் அரசாங்கம் கூட காமன்வெல்த் நாடுகளில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று கூறி இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை கூட இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற இனப்படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

சர்வதேச மனித உரிமை அமைப்பும் இலங்கை அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஆனால் இன்னமும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசை வலியுறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

இவ்வாறு அதில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.