ஆர்பிஜி உந்துகணையை சத்திர சிகிச்சை மூலம் அகற்றி இளம் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்

சிறிலங்கா படையினர் ஏவிய ஆர்பிஜி எறிகணை ஒன்று இளம் பெண் ஒருவரின் காலில் துளைத்து வெடிக்காதிருந்த நிலையில் குறித்த ஆர்பிஜி பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டு ஆர்பிஜியுடன் பாதிக்கப்பட்ட காலும் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

மாத்தளன் மருத்துவமனையின் பின்புறம் வசித்து வந்த 25 வயதுடைய ரவீந்திரராசா சுதர்சினி என்ற பெண்ணின் காலிலேயே ஆர்பிஜி உந்துகணை துளைத்து வெடிக்காத நிலையில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

இந்த பெண்ணின் காலில் ஆர்பிஜி உந்துகணை வெடிக்காத நிலையில் துளைத்ததும் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது மருத்துவர்கள் தாதியர்களும் பெரிதும் அச்சமடைந்து ஆர்பிஜி உந்துகணை வெடிக்கப்போகிறதோ என்று கருதி விலகிச் சென்றனர்.

[பெண் ஒருவரின் உடலைத் துளைத்து வெடிக்காத நிலையில் அவரை படுகாயப்படுத்தியிருக்கும் ஆர்பிஜி உந்துகணை. படம்: புதினத்துக்காக சகிலா]

எனினும் ஆர்பிஜி உந்துகணை பாதுகாப்பாக வெடிக்காத நிலையில் செயலிழக்கப்பட்டது. அதனையடுத்து துரிதமாக செயற்பட்ட மருத்துவர்களும் தாதியர்களும் சிகிச்சையளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆர்பிஜி உந்துகணையை எடுப்பதற்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை ஏற்பட்டது. பின்னர் பயிற்றப்பட்ட ஒருவர் சாதூரியமாக செயற்பட்டு ஆர்பிஜி உந்துகணையை செயலிழக்கச் செய்தார்.

எந்தவிதமான அடிப்படை மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் எதுவும் இல்லாத நிலையில் இருக்கின்ற உபகரணங்களையும் மருந்துகளையும் பயன்படுத்தி மருத்துவர்கள் வெற்றிகரமாக சத்திர சிகிச்சை செய்து நச்சுத்தன்மை உடலில் மேலும் பரவாத வகையில் பெண்ணின் பாதிக்கப்பட்ட காலை அகற்றினர் என்பது பாராட்டத்தக்கதாகும்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.