சர்வதேச “பல்குழல் பீரங்கிகளுக்கு முகம்கொடுத்த எமக்கு பொதுநலவாயத்திலிருந்து வெளியேற்றும் அச்சுறுத்தல்’ புஷ்வாணம்: நிமால்

பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை இடைநிறுத்துவதென்பது தனியொரு உறுப்பினரால் முடியாது. ஆயினும் அந்த அமைப்பில் அங்கம் வகிப்பதனால் இலங்கைக்கு கௌரவமோ, பெருமையோ எதுவும் கிடையாது என அரசின் சார்பாக சுகாதார அமைச்சர் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்த கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

யுத்த நிறுத்த அழைப்புக்கு 24 மணி நேரத்திற்குள் இலங்கை அரசாங்கம் பதிலளிக்காவிடின் பொதுநலவாயத்திலிருந்து இலங்கையை இடைநிறுத்துவதற்கான அழைப்பை பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் விடுக்கவேண்டுமென அந்நாட்டு தொழிற்கட்சி எம்.பி.யான ஜோயின் ரியான் தெரிவித்திருந்தமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் முகமாகவே மேற்கண்டவாறு பதிலளிக்கப்பட்டது.

இது தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா;

ஒரு உறுப்பினரால் கொண்டு வரப்படும் யோசனையால் பொதுநலவாயத்திலிருந்து இலங்கையை அகற்றி விட முடியாது. எனவே, இது குறித்து பயப்படத் தேவையில்லை. ஏனெனில், எமது வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும், செயலாளர் பாலித ஹோகன்னவும் திறமையானவர்கள்.

இவ்விடயம் வெறும் புஷ்வாணம் மட்டுமே, சர்வதேசத்திடமிருந்து இதைவிட பெரிய பல்குழல் பீரங்கி தாக்குதல்களுக்கெல்லாம் நாம் முகம் கொடுத்திருக்கிறோம். இதற்கும் நாம் முகம் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்.என்றார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.