அரசாங்கம்-புலிகள் இடையிலான மோதல்கள் கண்டிக்கப்பட வேண்டும்: அமெ. காங்கிரஸ் உறுப்பினர் ஜிம் மோரன் தெரிவிப்பு

மக்களின் இழப்புக்களைக் கவனத்திற் கொள்ளாது, அரசாங்கப் படையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மேற்கொண்டுவரும் யுத்தம் கண்டிக்கப்பட வேண்டியதென அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் ஜிம் மோரன் தெரிவித்துள்ளார்.

வன்னிப் பகுதியில் சுமார் 200,000 ற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் சிக்கி அல்லலுறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்னி மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க அமெரிக்கா உரிய முறையில் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமென காங்கிரஸ் உறுப்பினர் மோரன் உள்ளிட்ட 35 உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட எழுத்து மூல கோரிக்கை ஒன்று அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தின் பிரதியொன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமெரிக்கப் பிரதிநிதி சூசன் றைஸுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்று வரும் மனிதப் பேரவலமானது மனித உரிமை குறித்து கரிசனையுடைய அனைவராலும் கவனிக்கப்பட வேண்டியது எனவும் மோரன் குறிப்பிட்டுள்ளார்.

இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களின் நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.