தமிழர்கள் என்றுமே கண்டிராத கொடிய வேதனை; கண் திறந்து பாருங்கள்: அனைத்துலக சமூகத்திடம் கிழக்கு பல்கலைகழக சமூகம் வேண்டுகோள்

தமிழர்கள் என்றுமே கண்டிராத பேரவலத்துக்குள் வாழ்கின்றனர். அதனை கண்திறந்து பாருங்கள் என அனைத்துலக சமூகத்திடம் கிழக்கு பல்கலைகழக சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை கிழக்குப் பல்கலைக்கழகம் சமூகம் சார்பாக மாணவர்கள், நிர்வாகிகள், கல்வி சாரா ஊழியர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“தமிழர் தாயக நிலப்பரப்பு தற்போது வரலாறு காணாத ஒரு கொடிய போரை சந்தித்து நிற்கின்றது.

வன்னியில் இன்று குறுகிய நிலப்பரப்பு ஒன்றில் தமிழ் மக்கள் சந்திக்கும் மனிதப்பேரவலமானது தமிழ் மக்கள் வரலாற்றில் என்றுமே சந்தித்திருக்காத ஒரு கொடிய அவலமாக நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வருகின்றது.

அங்கு எம் உறவுகள் சந்திக்கும் அவல வாழ்வையும், உண்மை நிலைமையினையும் அனைத்துலகம் அறிந்திருந்தாலும் கூட அவர்களில் ஒரு தரப்பினர் சிறிலங்கா அரசுக்கு சார்பாகவும் மறு தரப்பினர் மிகவும் அமைதியாக தங்கள் கருத்துக்களை சிறிலங்கா அரசு மீது வெளிக்காட்டி வருகின்றனர்.

அக்கருத்துக்களை சிறிலங்கா அரசு உள்வாங்கும் நிலையில் இல்லை என்பதோடு மட்டுமல்லாது, அனைத்துலக அளவில் இலங்கையின் உண்மை நிலையினை எடுத்துக்காட்டுவதற்கு பலமானதாக இக்கருத்துக்கள் இல்லாதிருப்பது எமக்கு மிகுந்த ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சிறியதொரு சம்பவத்தைக் கூட முதன்மைப்படுத்தி வெளியிடும் அனைத்துலக ஊடகங்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கிலான மக்கள் உயிரிழக்க காரணமாக இருக்கும் யுத்தம் பற்றியும், பொருளாதாரத்தடை, உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு, குடிநீர் பிரச்சினை, மருத்துவ வசதியின்மை அவைகளுக்கு அப்பால் பட்டினிச்சாவை சந்தித்திருக்கும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாழ்வு கேள்விக்குறியாக நிற்கும் வேளையில் அம்மக்களின் உண்மை நிலையினை வெளிக்காட்டு இந்த அனைத்துலக ஊடகங்கள் தயக்கம் காட்டுவது சிறிலங்கா அரசின் படுகொலைக்கும் தமிழின அழிப்பிற்கும் மறைமுக ஆதரவு வழங்குவதுபோல் உள்ளது என்ற சந்தேகத்தினையும் எமக்கு தோற்றுவித்துள்ளது.

எம் உறவுகள் இன்று அனைத்துலக நாடுகள் பலவற்றில் வாழுகின்றனர். அதுமட்டுமல்லாது, தாங்கள் வாழும் நாடுகளில் வன்னியில் வாழும் தொப்புள் கொடி உளவுகளின் அவல வாழ்வையும் அம்மக்கள் இன்று சந்தித்து நிற்கும் கொடிய யுத்தத்தினையும் அம்மக்கள் மீது அனைத்துலகம் கருணை காட்டவேண்டும் என்றும் அனைத்துலக நாடுகளிடமும், அனைத்துலக அமைப்புக்களிடமும் கவன ஈர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டு மன்றாடி வருகின்றனர்.

இவ்வாறு நீண்ட காலமாக எம் மக்கள் அனைத்துலகத்திடம் விடுத்து வரும் வேண்டுதல்களுக்கு அனைத்துலகம் கவனம் செலுத்தாதிருப்பது மட்டில் நாங்கள் சந்தேகம் கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் தமிழின அழிப்பின் பின்னால் அனைத்துலகமே அணிதிரண்டு நிற்கின்றதா? என்கின்ற மிகப்பெரிய சந்தேகத்தினை எங்களுக்கு எற்படுத்தியுள்ளது.

மனித உரிமை பற்றியும், மனித நேயம் பற்றியும் பேசும் வல்லரசுகள் எங்களுக்காக பேச மறுப்பதன் காரணம் என்னவென்பது எங்களுக்கு புரியவில்லை.

வன்னியில் வாழும் பிஞ்சுகளின் நிலை கண்டும், செய்வதறியாது தவித்து நிற்கும் இளசுகளின் வாழ்வு குறித்தும், வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் கூட நிம்மதியான வாழ்வில்லாது ஏங்கும் முதியவர்களின் அவலம் குறித்தும் மறு நிமிடம் நாம் உயிரோடு இருப்போமா என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம் மக்களின் அன்றாட அவல வாழ்வை எங்கள் உறவுகள் உலகின் பல பாகங்களிலும் வெளிக்காட்டிக்கொண்டிருக்கும் நிலையில் இங்கு தென்தமிழீழத்தில் வாழும் நாங்கள் எம் உறவுகளுக்காக ஒன்றையுமே செய்யமுடியாத நிலையில் வாழ்கின்றோம் என்பதனை நினைத்து நாங்கள் கவலைகொள்கின்றோம்.

எம் உறவுகளுக்காக எங்கள் உணர்வுகளை வெளிக்காட்ட முடியாத அளவுக்கு எங்கள் மீதும் இராணுவ அழுத்தங்களும் ஆயுதக்குழுக்களின் அடாவடித்தனங்களும் பிரயோகிக்கப்படுகின்றன.

எமது அகிம்சை போராட்டங்கள் திரிவுபடுத்தப்பட்டு எங்கள் மீது ஆயுத வன்முறை பிரயோகிக்கப்படுகின்றது.

எம் உறவுகளின் இன்னல்கள் கண்டு உணர்வுள்ள தமிழர்கள் தீக்குளித்து தங்கள் உயிர்களை மாய்த்து வரும் நிலையில், தங்களின் இரத்த உறவுகள் வன்னியில் வாழும் நிலை கண்டு கதிகலங்கியுள்ள இப்பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் மன உழைச்சலுக்கு உட்பட்டு தற்கொலை செய்யும் பரிதாபமும் இங்கு மிகவும் அமைதியாக அரங்கேறி வருகின்றது.

வன்னியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொடிய போருக்கு எதிராக தங்கள் ஆதங்கங்களையும், எதிர்ப்புக்களையும் காட்டமுடியாத நிலையில் ஏற்கனவே இரு பல்கலைக்கழக மாணவிகளும், ஒரு பணியாளரும் தற்கொலை செய்துள்ளனர்.

இத்தனை உயிரிழப்புகளுக்கும் கொடுமைகளுக்கும் காரணமாக இருக்கும் யுத்தத்தினை நிறுத்த அனைத்துலக சமூகம் முன்வரவேண்டும் என்பதோடு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும்.

இந்நிலையில், எம்மக்களின் உரிமையை மீட்க நாம் எடுத்துக்கொண்டுள்ள அத்தனை முயற்சிகளிலும் சளைக்காது தொடர்ச்சியாக அயராது உழைத்து வெற்றி காண நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்!.”

இவ்வாறு இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.