அமெரிக்க எம்பிஏவுக்கு இந்தியர்கள் மத்தியில் மவுசு சரிவு

டெல்லி: உலக பொருளாதார நெருக்கடி மற்றும் விசா வழங்குவதில் ஒபாமா அரசு விதித்துள்ள புதிய உத்தரவுகள் ஆகியவற்றால் அமெரிக்கா சென்று எம்பிஏ படிக்கும் எண்ணம் இந்தியர்கள் மத்தியில் குறைய துவங்கியுள்ளது.

கடந்த ஆண்டு வரை அமெரிக்கா சென்று எம்பிஏ படித்து, அங்கே நல்ல நிறுவனத்தில் வேலையில் சேர வேண்டும் என்பது தான் இந்திய மற்றும் உலக இளைஞர்களி்ன் கனவாக இருந்தது.

ஆனால், உலக பொருளாதார பிரச்சினை மற்றும் ஒபாமா அரசு விசா வழங்குவதில் புகுத்தியுள்ள புதிய சிக்கலான நடைமுறைகள் ஆகியவற்றால் தற்போது இந்திய இளைஞர்களின் கனவுகளில் அமெரிக்கா வருவதில்லை.

அதேபோல் கடந்த காலங்களில் அமெரிக்காவில் படிக்க செல்லும் மாணவர்களுக்கு ரூ. 75 லட்சம் வரை கல்வி கடன்கள் கிடைத்தன. ஆனால், சமீபகாலமாக இது நிறுத்தப்பட்டு விட்டது. வங்கிகள் இது நாள் வரை இதற்கான மாற்று திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

இதையடுத்து இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் சொந்த நாட்டில் உள்ள கல்லூரிகளில் படிக்கவே அதிகம் விரும்புகிறார்கள்.

இது குறித்து மும்பையை சேர்ந்த நிஷாந்த் பனோர் என்ற மாணவர் கூறுகையில், எனக்கு அமெரிக்காவின் ஆண்டர்சன் ஸ்கூல் ஆப் மானேஜ்மன்டில் எம்பிஏ வாய்ப்பு கிடைத்தது. ரூ. 15 லட்சம் ஸ்காலர்ஷிப் தருவதாக சொன்னார்கள். ஆனால், படிப்பு முடித்தபின் அமெரிக்காவில் வேலை பார்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

எச்-1பி விசாவில் உள்ள சிக்கல்கள், அமெரிக்காவில் வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை இல்லை போன்ற அசாதாரண சூழ்நிலைகள் நிலவுவதால் இந்த வாய்ப்பை புறக்கணித்து விட்டேன்.

அமெரிக்காவில் மீண்டும் நல்ல சூழல் நிலவும் என்ற நம்பிக்கையில் அங்கு செல்ல நான் விரும்பவில்லை. இந்தியாவில் இருக்கும் ஐஐஎம்களில் ஒன்றில் சேர்ந்து படிக்கவிருக்கிறேன் என்றார்.

இந்தியா திரும்புகிறார்கள்…

அதே சமயத்தில் தற்போது அமெரிக்காவில் படித்து வரும் இந்தியர் மற்றும் சீனர்களில் 85 சதவீதம் பேர் தங்களுக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. படிப்பு முடித்தவுடன் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளனர். ஐரோப்பியர்கள் மத்தியில் இந்த எண்ணம் 72 சதவீதம் உள்ளது.

சீனர்களில் 52 சதவீதம் பேர் தங்களுக்கு வேலை வாய்ப்புக்கு ஏற்ற நாடாக சீனாவையே கருதுகிறார்கள். அமெரிக்காவில் படிக்கும் 32 சதவீதம் இந்தியர்கள் மற்றும் 26 சதவீதம் ஐரோப்பியர்கள் தற்போதைய சூழ்நிலையில் வேலை பார்க்க சிறந்த இடமாக தங்களது தாய்நாட்டையே கருதுவதாக தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில் அமெரிக்க படிப்புக்கு மவுசு குறைந்துள்ளதை சிகாகோ பூத் ஸ்கூல் ஆப் பிசினஸ் பல்கலைக்கழகத்தின் நிர்வாகி ரோஸ்மோரி மார்டினலி உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது என்றார்.

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.