மீண்டும் புறப்படும் யாழ் தேவியின் எதிரொலி வடக்கின் நம்பிக்கை நாதமாக விளங்கும்: ஜனாதிபதி.

தெற்கில் இருந்து மீண்டும் புறப்பட உள்ள யாழ்தேவியின் எதிரொலி வடக்கு மக்களுக்கு நம்பிக்கை நாதமாக விளங்கும். அது தேசத்தின் இதயத்துடிப்பாக விளங்கி சரித்திர பூர்வமான ரயில் பாதையை புனரமைக்க உதவும். இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

வடக்குக்கான யாழ்தேவி சேவையை ஆரம்பிக்கும் பணிகளை அலரி மாளிகையில் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு பேசுகையில் மேலும் கூறியதாவது:

1956 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி யாழ்தேவி தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது. ஆனால், அந்தப் பெறுமதி வாய்ந்த ரயில் பாதையை பின்னர் பயங்கரவாதிகள் நாசம் செய்தனர்.

ஆனால், பழைய கீர்த்தியை நாம் மீள உருவாக்கலாம். அதன்பொருட்டு மங்கள கரமான இந்த வைபவத்தில் “உத்தரமித்திரா” (வடக்கின் தோழன்) நிதியம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

எமது அரசு ஒரு பக்கம் பயங்கரவாதிகளிடம் இருந்து மக்களை விடுவித்து வருகிறது. மறுபுறம் வடக்குக் கிழக்கை அபிவிருத்தி செய்கிறது.
ரயில் பாதை அமைக்கும் பணியை எனது ஏப்ரல் மாத சம்பளத்தை வழங்கி ஆரம்பித்து வைக்கிறேன்.

இந்த பணிகளில் எனது அம்பாந்தோட்டை மக்களை ஈடுபடுத்தப் போகிறேன். அத்துடன் வவுனியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் உள்ள 28 ரயில் நிலையங்களையும் புனரமைக்க இருக்கின்றேன்.

வவுனியாவில் இருந்து 5 கிலோ மீற்றர் தூரத்துக்கு யாழ்தேவி சேவையை ஏப்ரல் 23ஆம் திகதி விஸ்தரிக்கத் திட்டமிட் டிருக்கிறேன் என்றார்.
நிகழ்வில் ஜனாதிபதி தமிழ் மொழி யிலும் உரையாற்றினார்.

நேற்றைய நிகழ்வில் “வடக்கின் வசந்தம்” இணையத்தளத்தை கிரிக்கெட் சாதனையாளர் முத்தையா முரளிதரன் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்வில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா மற்றும் அமைச்சர்கள், சமயப் பிரமுகர்கள், முதலமைச்சர்கள், இராஜதந்திரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.