இலங்கை அகதிகள் 13 பேர் படகில் தமிழகம் நாகபட்டினம் சென்றனர்

வன்னியில் சிறிலங்கா இராணுவ தாக்குதலுக்கு பயந்து, முல்லைத்தீவில் இருந்து 13 அகதிகள் நேற்று தமிழ்நாட்டின் நாகபட்டினம் சென்றனர். அவர்களுடன் மேலும் 2 படகுகளில் வந்தவர்களின் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை.

இலங்கையில் சிங்கள இராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் நடந்து வருவதால், அங்கிருந்து தமிழர்கள் படகுகளில் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வருகிறார்கள்.

இந்தநிலையில், நேற்று அதிகாலை 3 மணி அளவில் நாக பட்டினம் கல்லார் மீனவ கிராமத்திற்கு இலங்கையில் உள்ள முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த 13 பேர் ஒரு படகில் வந்து சேர்ந்தனர். இவர்கள் 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நாகை பொலிஸார் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது மொத்தம் 3 படகுகளில் அகதிகள் வந்ததும், இந்த 13 பேர் வந்த படகு மட்டும் திசை மாறி நாக பட்டினம் வந்து சேர்ந்ததும் தெரியவந்தது.

அவர்கள், இலங்கை முல்லைத்த்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சந்திரகாந்தா (49), சிவசந்திரன் (28), சிவகுமார் (26), செந்தூரன் (16), சோபிகா (19), ஈஸ்வரி (16), அன்பு (46), கேதீஸ்வரி (43), அகல்விழி (10), தேம்பாயினி (18), காந்தரூபன் (29), கல்யாணி (24), அந்தோனிமுத்து (63) என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், இவர்கள் சனிக்கிழமை அதிகாலை முல்லைத்தீவிலிருந்து புறப்பட்டு பைபர் கண்ணாடி இழை படகில் நாகைக்கு வந்ததாகத் தெரிவித்தனர்.

அகதிகளாக வந்தவர்களில் காந்தரூபனும் அவரது மனைவி கல்யாணியும் இலங்கைப் போரில் கையை இழந்தவர்கள். கல்யாணி இரு கை மணிக்கட்டுகளையும் இழந்தவர்.

இதனிடையே, நாகை மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அண்ணாதுரை போக்குவரத்து காவல் நிலையம் சென்று, அகதிகளிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணைக்குப் பின்னர், அவர்கள் 13 பேரும் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர், இலங்கை அகதிகள் நாகைக்கு வருவது இதுவே முதல் தடவை.

மற்ற 2 படகுகளும், அவற்றில் வந்தவர்களின் கதி என்ன ஆனது? என்றும் தெரியவில்லை. அது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகை வந்து சேர்ந்த அகதிகள் 13 பேருக்கும் மகளிர் பொலிஸ் நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் அவர்கள் இராமேசுவரம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேவேளை நேற்று சுண்டிக்குளத்தில் இலங்கை கடற்படையினரால் படகு ஒன்று தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகவும், அது விடுதலைப்புலிகளின் படகு என்றும் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டிருந்தது. எனினும் இவர்களுடன் பொதுமக்கள் வந்த படகுகளில் ஒன்றாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.