ஜப்பான் இலங்கைக்கு வழங்கும் பொருளாதார உதவிகளை நிறுத்தி,யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர உதவுமாறு கோரிக்கை: கஜேந்திரன்

ஜப்பானிய அரசு இலங்கை அரசுக்கு வழங்கும் பொருளாதார உதவிகளை நிறுத்தி யுத்தத்தினை உடன் முடிவுக்கு கொண்டுவர உதவ வேண்டும் என்று யாழ்.மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஜப்பானிய தூதுவராலயத்திற்கு அனுப்பியுள்ள கடிதம்:-

மேன்மை தங்கிய தூதுவர்
யப்பானிய தூதரகம்
கொழும்பு

இலங்கை அரசாங்கமானது இலங்கையிலுள்ள பயங்கரவாதத்தினை முற்றாக அழித்து ஐனநாயகத்தினை நிலை நாட்டப் போவதாக கூறி கடந்த மூன்று வருடங்களாக தமிழ் மக்கள் மீதான யுத்தத்தில் மூர்க்கத்தனமாக ஈடுபட்டு வருகின்றது.

இந்த யுத்தத்தினால் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வாழந்த தமிழ் மக்கள் 300,000 திற்கும் அதிகமானவர்கள் தமது வீடுகளையும் பெறுமதி மிக்க சொத்துக்களையும் இழந்த நிலையில் அகதிகளாக்கப்பட்டனர். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் இலங்கை அரசு வேண்டுமெனறே அனைத்து தமிழ் மக்களையும் பலாத்காரமாக இடம்பெயர வைத்துள்ளதுடன் உழைக்கும் வயதிலுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகளையும் குடும்பத் தலைவர்களையும் படுகொலை செய்தும் கடத்தி காணாமல் போகச் செய்தும் உள்ளது.

மொத்தமாக அகதிகளாக்கப்பட்ட மக்களின் சொத்துக்களையும் கொள்ளையடித்தோ அல்லது அழித்துள்ளதன் மூலம் அந்த மக்கள் ஆயுட்காலம் முழுவதும் அகதி நிவாரணத்திற்காக கையேந்தி வாழும் நிலைக்குள் தள்ளியுள்ளது. இடம் பெயர வைக்கப்பட்ட மக்களில் பல்லாயிரக் கணக்கானோர் இன்னமும் சொந்த ஊர்களில் மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை. இன்றும் கொலைகளும் கடத்தல்களும் கைதுகள், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள் என்பன வகை தொகையின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இவை ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போது பல சர்வதேச நாடுகள் விடுவிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக என்ற பெயரில் தாராளமான நிதியுதவிகளை அள்ளி வழங்குவதன் காரணமாக இலங்கை அரசுக்கு பொருளாதார ரீதியாக ஏற்படக் கூடிய நெருக்கடிகளில் இருந்து அது விடுவிக்கப்பட்டு தொடர்ந்தும் இன அழிப்பு யுத்தத்தினை முன்னெடுக்க அரசு தூண்டப்படுகின்றது.

பயங்கரவாதத்தினை அழித்தல் என்ற போர்வையில் வடக்கிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் யுத்தத்திலும் கிழக்கில் கையாண்ட அதே வழி முறைகளை கையாண்டு வன்னியில் வாழ்ந்த ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களின் பொருளாதாரத்தினையும் அழித்து அகதிகளாக்கியுள்ளது.

அரசு கிழக்கு மாகாணத்தினை முழுமையாக கைப்பற்றிய பின்னர் அதன் அபிவிருத்திக்காக என்று கூறி உலக நாடுகளிடம் நிதி உதவிகளை கோரிய போது பல நாடுகள் பெருமளவு உதவிகளை அள்ளி வழங்கி வருகின்றன. அவ்வாறு நிதி உதவிகளை அதிகளவில் வழங்கும் நாடுகளில் ஜப்பான் பெரும் பங்கு வகிக்கின்றது.

எனினும் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காகப் பெறப்பட்ட நிதியினைக் கொண்டு தமிழ் மக்களையோ தமிழ் மக்களின் பொருளாதாரத்தினையோ மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கவில்லை. கிழக்கில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினை நிலை நிறுத்தும் வேலைத்திட்டங்களுக்கே அதிகளவு முக்கியம் கொடுத்து வரும் அரசு வடக்கிலும் அந்த நோக்கிலேயே நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.

இலங்கை அரசின் செயற்பாடுகளானது விடுதலைப் புலிகளை முற்றாக அழித்தல் என்ற போர்வையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பேரம் பேசும் சக்தியை முற்றாக அழிப்பதனை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளதே அன்றி தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றை முன்வைத்து தமிழ் மக்களின் 60 ஆண்டுகால அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற எண்ணம் எதுவும் அரசிடம் இல்லை என்பது அரசின் நடவடிக்கைகளுக்கு ஊடாக வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இந் நிலையிலும் கூட அபிவிருத்திக்காக இலங்கை அரசுக்கு ஜப்பான் தொடர்ந்தும் பொருளாதார உதவிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருப்பதானது தமிழ் இன அழிப்பிற்கு ஒத்துழைக்கும் நடவடிக்கையாகவே அமைந்துள்ளது என்பதனை மிகவும் மன வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் 2800 ற்கும் அதிகமான தமிழ் மக்கள் அரசாங்கப் படைகளின் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 7000 ற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தும் உள்ளனர் எனவும் உணவு மருந்துகள் இன்றி இலட்சக் கணக்கான மக்கள் வன்னியில் ஆபத்தான நிலையில் தொடர்ந்தும் உள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் கடந்த வாரம் தெரிவித்துள்ளது.

இவ்வளவு கொடூரங்களும் தொடர்ந்தும் இடம் பெற்றுவரும் நிலையில் பல நாடுகள் போர் நிறுத்தப்பட வேண்டும். பொது மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படல் வேண்டும். என்ற கோரிக்கைகளை வெளிப்படையாக முன்வைத்து வரும் நிலையில் ஜப்பானிய அரசு தமிழ் மக்கள் கொல்லப்படுவது தொடர்பாகவோ, வன்னியிலுள்ள மக்கள் பட்டினிச்சாவை எதிர் நோக்கியுள்ளமை தொடர்பாகவோ, மருத்துவ வசதிகள் முழுமையாக மறுக்கப்பட்டு நாளாந்தம் சாவடைந்து கொண்டிருப்பது தொடர்பாகவோ, வெளிப்படையாக எந்தக் கவலையையும் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கின்றது.

விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளிலுள்ள மக்களது அழிவுகள் பற்றி மௌனமாக இருப்பது மட்டுமல்ல, இராணுவக் கட்டுப்பாட்டில் வந்துள்ள கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம் வவுனியா மன்னார் மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளில் தமிழ் மக்கள் கொடுமைப்படுத்தப்படுவது தொடர்பாகக் கூட ஜப்பானிய அரசு மௌனம் சாதிப்பது மிகுந்த வேதனையளிக்கின்றது.

இலங்கையை பௌத்த சிங்கள நாடாக மாற்ற முயலும் ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களின் இரகசிய திட்டத்திற்கு ஜப்பானிய அரசு துணை போகின்றதா என்ற சந்தேகத்தினையும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை தொடர்பாக ஜப்பான் கொண்டுள்ள தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து தமிழ் மக்களின் இன அழிப்பிற்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவர அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனக் கோருகின்றேன்.

Source & Thanks :tamilwin

Leave a Reply

Your email address will not be published.