ராமதாஸுடன் தங்கபாலு அவசர ஆலோசனை

சென்னை: கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்காமல் இருக்கும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை, இன்று காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். விரைவில் ராமதாஸ் கூட்டணிக்கு வருவார் என்று பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

சென்னை தி.நகரில் உள்ள பொங்கு தமிழ் அறக்கட்டளை அலுவலகத்திற்கு தங்கபாலு இன்று சென்றார். அங்கு டாக்டர் ராமதாஸை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

காங்கிரஸ் கூட்டணிக்கு வருமாறு அப்போது தங்கபாலு மீண்டும் வற்புறுத்தியதாக தெரிகிறது. திமுக 6 தொகுதிகளை கொடுப்பதாகவும், காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளிலிருந்து 2 தொகுதிகளைத் தருவதாகவும், திமுக கூட்டணிக்கு வந்து கூட்டணியை பலப்படுத்த வேண்டும் எனவும் தங்கபாலு கோரியதாக தெரிகிறது.

அதற்கு ராமதாஸ் என்ன பதில் சொன்னார் என்று தெரியவில்லை. இருப்பினும் இன்றைக்குள் கூட்டணி குறித்து அவர் முடிவெடுப்பார் எனத் தெரிகிறது.

தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைக்காது என்று உறுதியாக நம்பப்படுவதால், பாமக திமுக கூட்டணிக்கு வருவதற்கு பிரச்சினை இருக்காது என்றும் கூறப்படுகிறது.

ராமதாஸ் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தங்கபாலு பேசுகையில், தமிழ்நாட்டில் தி.மு.க. -காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணி அமைகிறது. சோனியா தலைமையை ஏற்கும் கட்சிகளை வரவேற்கிறோம். மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி தான் அமையும்.

அரசியலில் நல்லது நடக்கும். டாக்டர் ராமதாஸ் எனக்கு மிகவும் வேண்டியவர். காங்கிரஸ் மீது மிகவும் பற்று கொண்டவர். காங்கிரஸ் கூட்டணி அரசில் அவரது கட்சியும், மந்திரி சபையில் அங்கம் வகித்துள்ளது. தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறார்கள்.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு உள்ளது. செயற்குழு, பொதுக்குழுவில் கலந்து பேசி முடிவை அறிவிக்க இருப்பதால் விரைவில் நல்ல முடிவை தெரிவிப்பார்கள். எங்கள் கூட்டணியில் தான் சேருவார்கள் என்றார் தங்கபாலு.

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.