யுத்தத்தை காரணம் காட்டி அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை நசுக்குகிறது -எதிர்க்கட்சித் தலைவர் ரணில் குற்றச்சாட்டு

வீரகேசரி நாளேடு 3/23/2009 8:29:59 AM – அரசியலமைப்பு சபையை நிறுவி சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதால் வட பகுதியின் யுத்தத்திற்கு எதுவிதமான பாதிப்பும் ஏற்படாது. இதுவே உண்மை. ஆனால் அரசாங்கம் யுத்தத்தை காரணம் காட்டி ஜனநாயக உரிமைகளை நசுக்குகிறது. எனவே மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.கட்சியை வெற்றி பெறச் செய்வதன் மூலம் ‘ஜனநாயகத்தினை’ பாதுகாக்க வேண்டுமென்ற செய்தியை உங்களால் அரசாங்கத்திற்கு வழங்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐ.தே.கட்சி வேட்பாளர்களான சட்டத்தரணி ஷிரால் லக்திலக மற்றும் திஸ்ஸ ஜினதாஸ ஆகியோர் கோட்டே ஸ்ரீ ஜயவர்த்தனபுரவில் ஏற்பாடு செய்த மக்கள் விவாத மேடையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஐ.தே.கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது,

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஜனநாயக விரோத, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சர்வதேச சமூகம் சுமத்தி வருகிறது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 17 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அரசியலமைப்பு சபையை நிறுவி சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்து செயற்படச் செய்வதன் மூலம் இக்குற்றச்சாட்டுகளிலிருந்து மீள முடியும்..

இதனை மேற்கொண்டு நாட்டினதும் மக்களினதும் கௌரவத்தை பாதுகாக்க ஏன் ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொள்ளாது உள்ளார். எனவே மேல் மாகாணசபைத் தேர்தலில் ஐ.தே.கட்சிக்காக உங்களது .

பெறுமதியான வாக்குகளை வழங்கி அரசியலமைப்பு சபையை உடனடியாக அமைக்க வேண்டுமென்ற செய்தியை ஜனாதிபதிக்கு வழங்கவேண்டும். 2001 ஆம் ஆண்டு எமது ஆட்சியின் கீழ் அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டு சுயாதீன ஆணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டு அரசியல் மயமாக்கலில் இருந்து நாட்டை மீட்டெடுத்தோம்..

இதற்கு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆதரவு வழங்கினார். அதன்போது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்த இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலமைப்பு சபையை நியமிக்காது உள்ளார்..

பல்வேறுபட்ட காரணங்களை தெரிவித்து அரசியலமைப்பு சபை அமைக்கப்படுவதை உதாசீனம் செய்கின்றார். பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சிறுபான்மையின பிரதிநிதிகள் அனைவரதும் பெயர்கள் அரசியலமைப்பு சபைக்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதி தனது பிரதிநிதியை பிரேரிக்கவில்லை. இதனால் காலதாமதமாகிறது. உண்மையிலேயே ஜனாதிபதி ஜனநாயகத்தின் மீது பற்றுறுதி கொண்டிருப்பாரானால் அரசியலமைப்பு சபையை ஏற்படுத்தி மக்களுக்கு நாட்டுக்கு தனது ஜனநாயக விருப்பை வெளிப்படுத்த வேண்டும்..

வட பகுதி யுத்தத்தை பாதிக்கும் எந்தவிதமான நடவடிக்கையையும் மேற்கொள்வதில்லையெனக் கூறிக் கொண்டு அரசாங்கம் அரசியலமைப்பு சபை நிறுவப்படுவதை காலந்தாழ்த்துகிறது. அரசியலமைப்பு சபையை நிறுவுவதால் யுத்தத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. மனித உரிமைகள் சபை, ஐ.நா. சபை, அமெரிக்க செனட் சபை போன்ற சர்வதேச அமைப்புகள் இலங்கைக்கு எதிராக ஜனநாயக, மனித உரிமைகள் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது. இதிலிருந்து மீள்வதற்கு அரசியலமைப்பு சபையை நிறுவி சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதன் மூலம் நாட்டினதும் மக்களினதும் கௌரவத்தை அரசாங்கத்தால் பாதுகாத்துக் கொள்ள முடியும்..

அவ்வாறான சந்தர்ப்பம் இருந்தும் அரசாங்கம் ஏன் அதனை பயன்படுத்திக் கொள்வதில்லையென்பது தான் கேள்விக்குறியாக இருக்கின்றது. .

ரவி கருணாநாயக்க எம்.பி.

“தேசியத்துவத்தையும் தேசிய உற்பத்தியையும் பாதுகாப்போமென மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி இலங்கையிலிருந்து சர்வதேச நாணய நிதியத்தின் கிளையை மூடச் செய்து அங்குள்ள அதிகாரிகளை நாடு கடத்திய அரசாங்கம் இன்று மீண்டும் நாணய நிதிய பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்து 20,000 கோடி ரூபா கடனை கேட்பதோடு அரச வளங்களையும் தனியார் மயமாக்கும் முயற்சிகளை மும்முரமாக முன்னெடுத்து வருகிறது என்று இங்கு உரையாற்றிய ரவி கருணாநாயக்க எம்.பி. தெரிவித்தார்..

முகத்திரைகளை கிழிக்கப்பட்ட தேசப்பற்றாளர்களை இன்று மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். நாடு இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. எதிர்காலத்தில் மக்களை பெரும் துன்பங்கள் சூழ்ந்துள்ளன” E-mail to a friend

Source & Thanks : virakesari

Leave a Reply

Your email address will not be published.