ஈழ தமிழர் படுகொலையை கண்டித்து: “பட்டம்” வாங்க மறுத்த மாணவி; அரியலூர் அரசு கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்குவதற்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்ன வைக்கோ சிறப்பு விருந்தினராக வந்து இருந்தார்.


கல்லூரி முதல்வர் பன்னீர் செல்வம் உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்களும் மேடையில் அமர்ந்து இருந்தனர்.

ஒவ்வொரு மாணவராக பெயர் சொல்லி அழைக்கப்பட அவர்கள் மேடைக்கு சென்று “பட்டம்” பெற்றனர்.

இந்த கல்லூரியில் எம்.எஸ்.சி. சுற்றுசூழல் படிப்பு முடித்த அரியலூர் ஒட்ட கோவிலை சேர்ந்த மாணவி சுமதியை பெயர் சொல்லி அழைத்தனர். அவர் பட்டமளிப்பு விழா அரங்கத்தில் அமர்ந்து இருந்தும் “பட்டம்” வாங்க மேடைக்கு செல்லவில்லை. மீண்டும் அவரை அழைத்தும் அவர் “பட்டம்” பெற செல்ல மறுத்துவிட்டார். இதனால் விழா அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் பிறகு மற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழா முடிந்ததும் துணை வேந்தர் பொன்ன வைக்கோ, கல்லூரி முதல்வர் பன்னீர் செல்வத்திடம் பட்டம் பெற மறுத்த மாணவி சுமதியை அழைத்து வரும்படி கூறினார். இதைத்தொடர்ந்து அந்த மாணவியை கல்லூரி முதல்வர் அறைக்கு அழைத்து சென்றனர். துணைவேந்தர் அவரிடம் “பட்டம்” பெற மறுத்தது பற்றி விசாரித்தார்.

அப்போது இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது தனது மனதை மிகவும் பாதித்து உள்ளதாகவும் ஈழத்தமிழர்கள் துயரத்தில் இருக்கும்போது தான் “பட்டம்” பெற்று மகிழ்ச்சி அடைய விரும்பவில்லை என்றும் மாணவி சுமதி தழுதழுத்த குரலில் கூறினார்.

இதன்பிறகு அந்த மாணவியை சமாதானப்படுத்தி அவருக்கு துணைவேந்தர் “பட்டம்” வழங்கினார்

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.