யாழ். குடாநாட்டில் படையினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கை

யாழ்.குடாநாட்டில் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், மற்றும் யாழ்ப்பாணம் நகரம் போன்ற இடங்களில் சிறிலங்கா படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி மாலை வரை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.குடாநாட்டிற்குள் விடுதலைப்புலிகள் ஊடுருவியுள்ளனர் என சிறிலங்கா புலனாய்வுத் துறையினர் விடுத்த எச்சிரிக்கையின் பேரிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், குடாநாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் என்றுமில்லாதவாறு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இராணுவ முகாம்களில் வழமையை விட கூடுதலான படையினரும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சிப் பகுதியில் வல்வெட்டி, உடுப்பிட்டி மற்றும் நாவலடி பிரதேசங்களிலும், தென்மராட்சி பகுதியில் மந்துவில் மற்றும் வரணி பிரதேசங்களிலும் மற்றும் வலிகாமம் பகுதியிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேடுதல் நடவடிக்கையின்போது பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுதந்திர ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ள போதிலும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

Source & Thanks : tanilwin

Leave a Reply

Your email address will not be published.