மதுரை பல்கலையில் திடீர் மோதல் – 3 மாணவர்களுக்கு கத்திக் குத்து

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதிக்குள் புகுந்த சிலர் அங்கிருந்த 3 மாணவர்களை கத்தியால் குத்தினர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த 3 தினங்களாக இளைஞர் கலைத்திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த விழாவின்போது எம்.பி.ஏ. மற்றும் எம்.ஏ. மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்த பேராசிரியர்கள் சமரசம் செய்து அனுப்பினர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சில மாணவர்கள் எம்.ஏ. மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு சென்றனர். அங்கிருந்த மாணவர் ஒருவரை அடித்துள்ளனர். பின்னர் தப்பி விட்டனர்.

இதையடுத்து எம்.ஏ. மாணவர்கள் அனைவரும் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் பல்கலைக்கழகம் முன்பு உள்ள மதுரை-தேனி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

விரைந்து வந்த போலீசார் மாணவர்களிடம் `காலையில் பேசிக் கொள்ளலாம்` எனக்கூறி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். அதன்படி நேற்று காலை சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது.

அப்போது, இருதரப்பு மாணவர்களும் எந்த பிரச்சினைகளையும் செய்யக்கூடாது, மாணவர்களிடையே கருத்து வேறுபாடு இருக்கக்கூடாது என்று பேராசிரியர்கள் அறிவுறுத்தினர். இதனை இரு தரப்பு மாணவர்களும் ஏற்றுக்கொண்டு வகுப்புகளுக்கு திரும்பினர்.

இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் வெளியில் இருந்து வந்த 6 வாலிபர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள், திடீரென அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் எம்.ஏ. மாணவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு சென்று அங்கு நிறுத்தியிருந்த வாகனங்களை கீழே தள்ளி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் மாணவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அவர்களை பிடிக்க முயன்றனர்.

அப்போது சில மாணவர்கள், வெளியாட்களுக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பு மாணவர்களிடையே மீண்டும் மோதல் மூண்டது. கல்வீச்சில் இறங்கினர். பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதைப் பயன்படுத்தி உள்ளே புகுந்த 6 பேரும் தப்ப முயன்றனர். ஆனால் அவர்களை மாணவர்கள் மடக்கினர். இருப்பினும் 3 பேர் தப்பி ஓடி விட்டனர். மற்ற 3 பேரில் ஒருவர் திடீரென கத்தியால் மாணவர்களைக் குத்தினார். இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். இதைப் பயன்படுத்தி அந்த 3 பேரும் தப்பி விட்டனர்.

இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. பல்கலைக்கழக நுழைவாயில் மூடப்பட்டது.

உள்ளே வந்து மாணவர்களைத் தாக்கிய வாலிபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் கிடைத்துள்ளது. அவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.