உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி மீது செருப்பு வீசிய பெண்

மராட்டிய மாநிலத்தில் இசைக் கல்லூரி ஒன்றில் நடைபெறும் முறைகேடுகள் குறித்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி அரிசித் பசாயத் மறுத்ததால் கோபமு‌ற்ற இசைக் கல்லூரி மாணவிகளில் ஒருவர், நீதிபதி மீது செருப்பை வீசினார்.

நீதிபதி பசாயத் விலகிக் கொண்டதால் அவர் மீது செருப்பு பட‌வில்லை. நீதிமன்றத்தை அவமதித்ததற்காக 4 மாணவிகள் மற்றும் ஒரு மாணவியின் தந்தை உட்பட 5 பேருக்கு 3 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மராட்டிய மாநிலத் தலைநகர் மும்பையில் செயல்பட்டு வரும் பாஸ்கோ இசைக் கல்லூரிக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான நன்கொடை வருகிறது. இதை கல்லூரி நிர்வாகம் முறைகேடு செய்வதாக அக்கல்லூரியில் ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவிகள் மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

ஆனால் இந்த வழக்கை மராட்டிய அமர்வு நீதிமன்றமும், மும்பை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.

இதனை எதிர்த்து பவித்ரா முரளி என்ற ஆராய்ச்சி மாணவி உச்ச நீதிமன்றத்தில் 10 முறைக்கும் அதிகமாக மேல் முறையீடு செய்தார். ஆனால் ஏதேதோ காரணம் காட்டி ஒவ்வொரு முறையும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தங்களது வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளாததுடன், தங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர ஆணையிட்ட நீதிபதிகளை சிறையில் அடைக்க வேண்டும் என்று பவித்ரா முரளி உள்ளிட்ட 4 மாணவிகள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இசைக் கல்லூரி மீதும் புதிய வழக்கைத் தொடர்ந்தனர்.

இந்த இரு வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அரிசித் பசாயத், ஏ.கே. கங்கூலி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதில், மாணவிகள் பவித்ரா முரளி, லீலா டேவிட், சரிதா பாரிக், என்னட் கோட்டியான், சரிதா பாரிக்கின் தந்தை கிசோர் பாரிக் உள்ளிட்டவர்கள் நீதிமன்றத்தில் நேர் நின்று வாதிட்டனர்.

இவர்கள் முறைகேடுகள் தொடர்பாக 700 பக்க ஆவணங்களைத் தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்த அவர்கள், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தக் கோரினர்.

ஆனால் 700 பக்க ஆவணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதிபதி அரிசித் பசாயத் கூறியதை அடுத்து அவருக்கும், மாணவிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதத்தால் கோபமடைந்த நீதிபதி, மாணவிகளை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். நீதிபதியின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த மாணவி பவித்ரா முரளி, கீழ் நீதிமன்றங்களைப் போல உச்ச நீதிமன்றத்திலும் ஊழல் மலிந்துவிட்டது என்று கூறியபடியே தனது காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி அரிசித் பசாயத்தை நோக்கி வீசினார். அப்போது அரிசித் பசாயத் சற்று நகர்ந்ததால் அவர் மீது செருப்பு படவில்லை.

இ‌ந்த சம்பவத்தைக் கண்ட வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

நீதிபதிகள் ஆணைப்படி அங்குப் பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.

நீதிபதி மீது செருப்பு வீசியதற்காகவும், நீதிமன்றத்தை அவமதித்ததற்காகவும் 5 பேருக்கும் 3 மாதச் சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

மேலும், நீதிபதிகள் அரிசித் பசாயத்தும், ஏ.கே. கங்கூலியும், நீதிமன்ற அவமதிப்பு மற்றும் இந்த நடவடிக்கை குறித்து பெரிய அமர்வு விசாரித்து தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளனர்.

அதன்படி, தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், வரும் மார்ச் 23ஆம் தேதி இது குறித்து விசாரித்து, இந்த குற்றத்தின் அடிப்படையையும், இதற்கான தண்டனையையும் அறிவிப்பார்.

Source & Thanks : tamil.webdunia

Leave a Reply

Your email address will not be published.