சத்யம்: 18000 பணியாளர்கள் கூடுதலாக இருப்பதாக ஏலதாரர் கருத்து!

ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தில் 15000 முதல் 18000 வரை கூடுதல் பணியாளர்கள் இருப்பதாக அந் நிறுவனத்தின் 51 தவிகித பங்குகளை ஏலம் எடுக்கவுள்ள நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

எல் அண்டு டி, ஸ்பைஸ், டெக் மஹிந்திரா, ஐபிஎம், ஐகேட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சத்யம் பங்குகளை ஏலத்தில் எடுக்க விருப்ப மனுக்களைத் தந்துள்ளன.

ஆனால் ஏலத்தில் எடுக்கும் முன்பே, சத்யம் நிறுவனத்தின் நிதி நிலை, வருவாய் அளவு போன்றவை குறித்து கருத்து தெரிவித்து வருகின்றன இந்த நிறுவனங்கள். அதாவது வாங்குவதற்கு முன் மாட்டைப் பல் பிடித்துப் பார்ப்பது போல!

சத்யம் நிறுவனத்தின் மிகப்பெரிய பலமே அந்நிறுவன ஊழியர்கள்தான் எனக் கருதப்பட்டு வந்த நிலையில், 15000லிருந்து 18000 வரை தேவையற்ற ஊழியர்கள் பணியில் உள்ளதாக ஐகேட் நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. இது ஊழியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சத்யம் நிறுவனத்தின் அந்நியச் செலாவணி இழப்பு எவ்வளவு என்று தெளிவாகக் கூற வேண்டும் என்று சில நிறுவனங்களும், சத்யம் வருமானம் எதிர்பார்த்ததை விட 25 சதவிகிதம் குறைவாகத்தான் இருக்கும் என்று இன்னும் சில நிறுவனங்களும் கருத்து தெரிவித்துள்ளன.

இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் சத்யம் பங்குகளுக்கு ஐகேட் நிறுவனம் ரூ.45 ரூபாயும், டெக் மஹிந்திரா நிறுவனம் ரூ.35 ம் நிர்ணயித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எல் அண்டு டி மற்றும் ஸ்பைஸ் நிறுவனங்கள்தான் அதிகபட்சமாக ரூ 50 முதல் 60 வரை விலை நிர்ணயித்துள்ளனவாம்.

இதற்கிடையே, சத்யம் நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகள் ஏலத்தில் பங்கேற்கத் தகுதிவாய்ந்த நிறுவனங்களைப் பட்டியலிட இன்று இயக்குநர்கள் குழு கூடியது. ஏலத்தில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் எவை என்பது நாளை அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.