குடிநீரென நச்சுத்திராவகத்தை அருந்திய தமிழ் யுவதி மரணம்: கொழும்பு தனியார் வைத்தியசாலையில் நடந்த பரிதாபம்

கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை குடிநீரென நினைத்து தவறுதலாக நச்சுத்திராவகத்தை அருந்திய இளம் யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

நோயாளர்களைப் பார்வையிடுவதற்குச் செல்வோர் தங்கியிருக்கும் பகுதியில் பொறுப்பற்ற விதத்தில் குடிநீர்ப் போத்தலில் இந்த நச்சுத்திராவகம் இருந்ததே இந்த துயர சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

நோய்வாய்ப்பட்டு பிரபல தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினர் ஒருவரைப் பார்வையிடவேறு சிலருடன் சென்ற அந்த யுவதி நோயாளர்களைப் பார்வையிடுவோர் தங்கியிருக்கும் பகுதியில் இருந்துள்ளார். அவ்விடத்தில் குடிநீர் போத்தல் (மினரல் வாட்டர் போத்தல்) ஒன்று இருக்கவே தன்னுடன் வந்தவர்களது குடிநீர் போத்தலென நினைத்து அதிலிருந்ததை அந்த யுவதி குடித்துள்ளார். ஆனால் அதிலிருந்ததோ நச்சுத்திராவகம். நிலத்தை மெருகூட்டுவதற்காக (பொலிஷ்) குடிநீர் போத்தலினுள் அந்தத் திராவகத்தை வேலையாட்கள் அங்கு வைத்துள்ளனர்.

அந்த திராவத்தை குறித்த யுவதி குடித்ததும் அவருக்கு தலைச்சுற்றலுடன் மயக்கமேற்படவே அவருடன் சென்றவர்கள் அந்த யுவதியை உடனடியாக அந்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

5000 ரூபா அறவிட்ட பின்னர் அவரை டாக்டர் ஒருவர் பரிசோதித்ததுடன் அது சாதாரண தலைச்சுற்றல் எனவும் வேறொன்றும் இல்லையெனவும் கூறியுள்ளார். எனினும் அந்த யுவதி பெரும் அவஸ்தைப்படவே டாக்டரிடம் மீண்டும் அவரைச் சோதனையிடுமாறு அவருடன் சென்றவர்கள் கூறவே அவருக்கு ஒன்றுமில்லை பயப்படவேண்டாமென்று டாகடர் மீண்டும் கூறியுள்ளார்.

இதற்கிடையில் நோயாளர்களைப் பார்வையிடுவோர் அமரும் பகுதிக்கு வந்த வைத்தியசாலை ஊழியரொருவர் அந்தப் போத்தலை அங்கு தேடவே நடந்த விபரத்தை அங்கிருந்தவர்கள் கூறியதுடன் அந்த யுவதியை வெளிநோயாளர் பிரிவுக்கு கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளனர்.

பதற்றமடைந்த அந்த ஊழியர் உடனடியாக வெளிநோயாளர் பிரிவுக்குச் சென்று அந்த டாக்டரிடம் விடயத்தைக் கூறியதுடன் அது நிலத்தைப் பொலிஷ் செய்யப் பயன்படும் நச்சுத்திரவமெனக் கூறவே மயக்க நிலையிலிருந்த அந்த யுவதியை உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டுசென்று சிகிச்சையளித்துள்ளனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி அந்த யுவதி மாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார். மேல் மாகாண சபை கல்வித்திணைக்களத்தில் பணியாற்றும் யோ.சண்முகப்பிரியா (வயது 32) என்ற திருகோணமலையைச் சேர்ந்தவருக்கே இந்த பரிதாப நிலை ஏற்பட்டது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.