கொத்தணி குண்டுகளை வீசுவதை நிறுத்துமாறு ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவிடம் பொதுமக்களால் வழங்கபட்ட மனுக்களை சுவிஸ் சமாதான செயற்பாட்டுக்குழு கையளிப்பு:

சிறிலங்கா படைகளால் பொதுமக்கள் மீது கொத்தணி குண்டுகள் வீசுவதை நிறுத்துமாறும், போர்நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டு அங்குள்ள மக்களை காப்பாற்றுமாறும், பொதுமக்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டு மனுக்களை, சுவிஸ் சமாதான செயற்பாட்டுக்குழு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை கையளித்தனர்
About Peace Activities Switzerland

சுவிஸ் சமாதான செயற்பாட்டுக்குழுவின் ரொபெர்தோ பேய்க்கு லோபெத்ஸ், சபின் லிஎக்சி, தெய்வேந்திரன் தயாதரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் அலுவகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் விவகார பிரிவின் பிரதம அதிகாரி ஜுன் ரே அம்மையாரையும், மற்றும் மனித உரிமைகள் அலுவக உத்தியோகத்தர் திரு நெய்ல் கில்மோர் ஆகியோரை சந்தித்து மனுக்களை கையளித்ததுடன் வன்னியில் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்தும் விரிவாக எடுத்து கூறினர்.

சிறிலங்கா அரசாங்கம் கொத்தணி குண்டுகள் வீசுவதை தடுப்பதுடன், போர்நிறுத்தம் ஒன்றை செய்ய வேண்டும் என்றும், இலங்கை உட்பட கொத்தணி குண்டுகளை கையிருப்பில் வைத்திருக்கும் நாடுகள் அவற்றை அழிக்க வேண்டும் என்றும், சமாதான செயற்பாட்டு குழுவை சேர்ந்த லோப்பெத்ஸ் ரொபெர்தோ மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

சுவிஸ் அரசு உட்பட சில நாடுகள் கொத்தணி குண்டுகளை உற்பத்தி செய்வதாக தாங்கள் அறிவதாகவும், இத்தகைய குண்டுகளை உற்பத்தி செய்வதையோ, இலங்கை போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்வதையோ நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமாதான நடவடிக்கைக்குழு முக்கிய செயற்பாட்டாளர் ரொபெர்தோ லோபெத்ஸ் கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து ஐநாவின் பாதுகாப்பு சபை கூடி விசாரிக்க வேண்டும் என்றும், அவர்களை யுத்தப் பிரதேசத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்றும், அவர்களை சிறிலங்கா அரசிடம் ஒப்படைக்க கூடாது என்றும், அவர்களுக்கு ஐ.நா.வின் பாதுகாப்பில் புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்,

அத்துடன் அக்குழுவின் செயற்பாட்டாளர் தரன் அவர்கள் அங்குள்ள மருத்துவ மற்றும் உணவு பொருட்களின் தடை குறித்தும், அதனால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவலம் குறித்தும் விளக்கியதுடன், அங்கு ஊடகங்களையும் தன்னார்வ உதவி நிறுவனங்களையும் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க ஐ.நா. ஆவன செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக ஐ.நா.வின் மனித உரிமை அணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்கள் நாடு திரும்பியதும் அவருடன் சமாதான செயற்பாட்டுக் குழுவினரும் சந்தித்து பேசுவதென்று தீர்மானிக்கப்பட்டிருப்பதாக சுவிஸ் சமாதான செயற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.