பல முனைகளில் முன்நகரும் சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிலங்கா படையினர் பல முனைகளில் மேற்கொண்டு வரும் முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இரணைப்பாலை செந்தூரன் சிலையடி பகுதியில் நேற்று முன்நாள் புதன்கிழமை சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.

இப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டளை மையங்களை நோக்கி முன்னகர்ந்த படையினர் மீதும் விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் மிகக்குறுகிய இடைவெளியில் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

உடலங்கள் மற்றும் ஆயுதங்களை கைவிட்டு விட்டு படையினர் பழைய நிலைகளுக்கு பின்வாங்கிச் சென்றனர்.

இதேவேளையில் இரணைப்பாலை அமலன் வெதுப்பகச்சந்தி, டயர் கடைச் சந்தி ஆகிய இடங்களில் நேற்று முன்நாள் முன்நகர்வில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதலில் படையினரின் நகர்வு முறியடிக்கப்பட்டது.

இதில் படையினர் பலத்த இழப்புக்களுடன் பின்வாங்கிச் சென்றனர்.

அதேவேளையில் மந்துவில் சந்தி நோக்கி நேற்று முன்நாள் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

படையினரின் கொமாண்டோக்கள் மேற்கொண்ட முன்நகர்வே விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.

இதேவேளையில் புதுக்குடியிருப்பு சிவன் கோவிலடிக்கு அருகாமையில் நேற்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.

இதில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டன.

படையினரின் இரண்டு உடலங்களும் படையப்பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.