561 பேருக்கு பணத்தை திருப்பி தரும் டிஎல்எப்!

சென்னை: இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எப் தனது சென்னை புராஜெக்டில் வீடு வாங்க அதிக பணம் கொடுத்த வாடிக்கையாளர்களில் 561 பேருக்கு பணத்தை திரும்பித் தர ஆரம்பித்துள்ளது.

சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் இந்த நிறுவனம் கார்டன் சிட்டி எனும் பெயரில் புதிய வீடுகளைக் கட்டி வருகிறது. இந்த திட்டத்தில் 1800 பேருக்கும் மேல் வீடு கேட்டு பணம் செலுத்தியுள்ளனர். இவர்கள் அனைவருமே 95 சதவிகிதம் வரை பணத்தைச் செலுத்திவிட்டார்கள். ஆனால் இன்னும் கட்டுமானப் பணிகள் முடியவில்லை. இந்நிலையில், ரியல் எஸ்டேட் தொழில் பெரும் சரிவுக்குள்ளாகிவிட்டது. சர்வதேச பொருளாதார வீழ்ச்சி காரணமாக வீடுகள் மற்றும் நிலத்தின் விலை 40 சதவிகிதத்துக்கும் மேல் சரிந்துவிட்டது.

இதனால் டிஎல்எப் நிறுவனம் ஏற்கெனவே இதே பாணியில் துவங்கப்பட்ட பெங்களூர், ஹைதராபாத் வீட்டு வசதித் திட்டங்களில் 25 முதல் 30 சதவிகிதம் வரை விலையைக் குறைத்தது.

ஆனால் சென்னையில் மட்டும் குறைக்கவில்லை. இதனால் சென்னை வாடிக்கையாளர்கள் போர்க்கொடி உயர்த்தினர். பணம் செலுத்திய 1800 வாடிக்கையாளர்களில் 1500 பேர் மட்டும் தனிக் குழுவாக சேர்ந்து டிஎல்எப் நிறுவனத்துக்கு கடிதம் எழுதினர். இவர்களில் 600 பேர் வரை, தங்களுக்கு வீடு வேண்டாம், பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் எனக் கேட்க, ஆடிப் போனது டிஎல்ப்.

பணம் திரும்பக் கிடைக்காவிட்டால் கோர்ட்டுக்குப் போகப் போவதாக வாடிக்கையாளர்கள் பிடிவாதமாக இருந்ததாலும், தங்களின் கஷ்ட நிலையை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியதாலும், வேறு வழியின்றி இறங்கிவந்துள்ளது டிஎல்எப்.

தங்களது சென்னை கார்டன் சிட்டி திட்டத்தில் பணம் செலுத்தியவர்களில் 561 பேருக்கு உடனடியாக பணத்தைத் திருப்பித் தர ஒப்புக் கொண்டுள்ளது இந்நிறுவனம்.

முதல்கட்டமாக இவர்களில் 4 பேருக்கு முழுப் பணத்துக்கான காசோலைகளை அனுப்பியுள்ள டிஎல்எப், மற்ற வாடிக்கையாளர்களுக்கும் இந்த வாரத்தில் மொத்தமப் பணத்தையும் தந்துவிடுவதாக அறிவித்துள்ளது.

டிஎல்எப்பின் இந்த கார்டன் சிட்டியில் மொத்தம் 3493 அபார்ட்மெண்டுகள் கட்டப்படுகின்றன. இவற்றில் 1800 பிளாட்டுகளுக்கு 60 முதல் 95 சதவிகிதம் வரை பணம் செலுத்தப்பட்டிருந்தது. மற்றவை இன்னும் அப்படியே உள்ளன.

வீடு வேண்டாம் என வெளியேறுவது ஏன்?

கார்டன் சிட்டியில் வீடு வாங்கியவர்களில் பெரும்பாலானோர் ஐடி துறையைச் சேர்ந்தவர்களே. சென்னை புறநகரான இந்தப் பகுதியில் விலை அதிகம் என்று தெரிந்தும் ரூ.65 லட்சம் முதல் 80 லட்சம் வரையிலான பெரும் தொகைக்கு பிளாட்டுகளை வாங்கியிருந்தனர்.

இவர்களில் பலர் கையிலிருந்த பணம் முழுவதையும் முன்பணமாகக் கொடுத்துவிட்டு வங்கிகளில் கடனுக்கு விண்ணப்பித்து இருந்தார்களாம். ஆனால் விண்ணப்பித்தவர்களில் 10 சதவிகிதத்தினருக்குக் கூட வங்கிக் கடன் கிடைக்கவில்லையாம். இதனால் பெரும்பாலானோர் தங்களது சொத்துக்களை விற்றும், நகைகள் மற்றும் கிராமத்திலிருந்த நிலங்களை விற்றும் டிஎல்எப்புக்கு பணம் செலுத்தியுள்ளனர். மேலும் இந்த திட்டத்தில் வீடுவாங்கியவர்கள் கணிசமானோர் வெளிநாடுகளில் வேலைபார்க்கும் தங்கள் பிள்ளைகளை நம்பியும் பணம் செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் பொருளாதார பெருமந்தம் காரணமாக பலருக்கு வேலை பறிபோக ஆரம்பித்துள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் பணியாற்றுபவர்கள் வேலை இழந்து தாயகம் திரும்ப ஆரம்பித்துள்ளனர். இன்னும் சிலருக்கு சம்பளத்தில் பெரும்பகுதி குறைக்கப்பட்டுள்ளது.

எனவே வேறு வழியின்றி, வீடு வேண்டாம், கட்டிய பணத்தைக் கொடுத்துவிட்டால் போதும் என டிஎல்எப்பிடம் கெஞ்ச வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டார்களாம்.

இது குறித்து டிஎல்எப் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வாடிக்கையாளர்களின் சூழ்நிலையைப் பார்த்த பிறகுதான் நாங்கள் பணத்தைத் திருப்பித் தர ஒப்புக் கொண்டோம். இவர்களுக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை, வேலையும் போய்விட்டது. எனவே இப்போதைக்கு இந்தப் பணம்தான் இவர்களுக்கு பெரும் ஆறுதல் என்பதால் பணத்தைத் திருப்பித் தருகிறோம், என தெரிவித்தார்.

இப்போது 950 வாடிக்கையாளர் மட்டுமே கார்டன் சிட்டி திட்டத்தில் உள்ளனர். இவர்களுக்கும் இப்போது 15 சதவிகிதம் வரை விலைக்குறைப்பை அறிவித்துள்ளது டிஎல்எப்.

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.