இது என் முதல் வெற்றி: பூரிக்கிறார் சிவகாமி

தமிழகத்தில் கடந்த 29 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பல்வேறு துறைகளில் பணிபுரிந்தவர் சிவகாமி. வேலூர் மாவட்டத்தில் கலெக்டராக இருந்தபோது, மக்கள் பயன் பாட்டிற்கான குடிநீரை, தொகுதி எம்.பி., தனது ஓட்டலுக்கு பயன்படுத்தியதைக் கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுத்தவர்.

தூத்துக்குடி கலெக்டராக இருந்தபோதும் பல அதிரடிகளை மேற் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். தொழிலாளர் நலத்துறைச் செயலராக இருந்தபோது, ஏழு மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க முயற்சி மேற்கொண்டவர். ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலராக இருந்தபோது, கொத்தடிமை முறையை ஒழிக்க முக்கிய பணிகளை மேற்கொண்டார். பெண்கள், அரவாணிகள், மலைவாழ் மக்கள் முன்னேற்றத்திற் காக நேரடியாகவும், தனது “புதிய கோடங்கிகள்’ பத்திரிகை வாயிலாகவும் போராடி வருபவர்.இவர், கடந்த நவம்பர் மாதம் தனது ஐ.ஏ.எஸ்., பதவியை ராஜினாமா செய்து, பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். கட்சியின் தமிழக முதன்மைச் செயலர் பதவியை வழங்கிய மாயாவதி, தற்போது கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராகவும் சிவகாமியை களம் இறக்கியுள்ளார்.தொகுதியில், சிவகாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தொடர் பிரசாரத்திற்கு இடையில் நமது நிருபருக்கு அளித்த பேட்டி: பொது தொகுதியான கன்னியாகுமரியை தேர்ந்தெடுத்தது ஏன்?

படித்தவர்கள் இந்தத் தொகுதியில் அதிகம் இருக்கின்றனர். ஜாதி, மதம் கடந்து அவர்கள் சிந்திப்பர் என்ற நம்பிக்கை தான் முதல் காரணம். தேசிய கட்சிகள் மட்டுமே இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வருவதும் மற்றொரு காரணம்.

உங்களால் அங்கு வெற்றி பெற முடியுமா?

பிரகாசமான வெற்றி வாய்ப்பு இருப்பதை, பிரசாரத்தின் போது தெளிவாக உணர்கிறேன். அனைத்து தரப்பு மக்களும் பக்கபலமாக இருக்கின்றனர்.

எதை முன்னிறுத்தி ஓட்டு கேட்கிறீர்கள்?

போலி மதச்சார்பின்மை பேசாமல், அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்லும் மாயாவதியின் கொள் கைளை மையப்படுத்தி பேசுகிறேன். மாயாவதி பிரதமரானால், தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு, நிலமற்ற அனைத்து சமுதாயத்தினருக்கும் நிலம், வீடு இல்லாதவர்களுக்கு வீடு, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவி மற்றும் பெண் குழந்தைகளுக்கு 18 வயதாகும்போது ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டங்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்கிறேன்.

கூட்டணி பலத்துடன் கட்சிகள் களம் இறங்கும் நிலையில், உங்களால் தனித்து சமாளிக்க முடியுமா?

மக்களுடன் கூட்டணி வைத்துள்ளதால் மனதில் எந்த பயமும், பதட்டமும் இல்லை.

உங்கள் தேர்தல் வாக்குறுதி என்ன?கன்னியாகுமரியில் ரப்பர் தொழிற்சாலை, மேம்படுத்தப்பட்ட நவீன மீன்பிடி துறைமுகம், படித்த பட்டதாரிகள் அதிகம் உள்ளதால் வேலை வாய்ப்பு பயிற்சி மையங்கள், பெண்களுக்கான ஐ.ஏ.எஸ்., உள் ளிட்ட போட்டித்தேர்வு பயிற்சி மையம் ஆகியவை அமைப்பதற்காக பாடுபடுவேன்.

தேர்தல் செலவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?

பிரசாரம் செய்யும்போது ஒவ்வொரு கிராமத்திலும் மக்களே முன்வந்து எனக்கு தேர்தல் நிதி வழங்குகின்றனர். தொகுதியில் உள்ள கிராமங்களான குளத்தூரில் 2,550 ரூபாய், சபையார்குளத்தில் 585 ரூபாய், மண்ணடியில் 520, கண்ணாமோட்டில் 100, புலியடியில் 240, கண்டளவில் 430 ரூபாய் என பல இடங்களில் தேர்தல் நிதியை மக்களே எனக்கு வழங்கியுள்ளனர். மக்களே, ஒரு வேட்பாளருக்கு நிதி தருவது, கலாசார மாற்றம். இது எனக்கு கிடைத்த முதல் வெற்றி. இவ்வாறு சிவகாமி பேட்டியளித்தார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.