அதிகரிக்கும் எதிர்பார்ப்பு-திணறும் டாடா

டாடா நிறுவனம் இம்மாத இறுதியில் நானோ காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இந்த காரை வாங்க விரும்புவர்கள் ரூ 300 செலுத்தி விண்ணப்பம் பெற்று, அதை பூர்த்தி செய்து அனுப்ப சொல்லியது.

மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிகப்படியான எதிர்பார்ப்பு காரணமாக டாடா அடுத்த 1 ஆண்டுக்குள் தயாரிக்கும் கார்களின் எண்ணிக்கையை விட அதற்கான தேவை பல மடங்கு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து யர்னஸ்ட் அன்ட் யங் நிறுவனத்தின் பங்குதாரர் ராகேஷ் பத்ரா கூறுகையில், இது தனித்துவமான படைப்பு. மக்கள் மத்தியில் இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றார்.

இந்நிலையில் டாடா நிறுவனம் ஆண்டுக்கு 1 லட்சம் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் இருக்கும் இவர்களுக்கு சொந்தமான தொழிற்சாலையில் ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கார்கள் வரை மட்டுமே தயாரிக்க முடியும். சானந்த் நகரில் நிறுவப்பட்டு வரும் தொழிற்சாலையில் கார் உற்பத்தியை துவக்க இன்னும் ஓராண்டுகள் தேவைப்படும்.

எனவே டாடா நிறுவனம் தனது இலக்கை எட்ட தேவையான மீதி கார்களை புனே தொழிற்சாலையில் தயாரிக்கலாம். ஆனால், புனே தொழிற்சாலை முழுக்க ஏற்றுமதி கார்களை தயாரித்து வருகிறது. நானோ அங்கு தயாரிக்கப்பட்டால் இந்நிறுவனத்தின் ஏற்றுமதி பாதிக்கப்படலாம். இதனால் ஆண்டுக்கு 1 லட்சம் காரை தயாரிக்க டாடா என்ன செய்யப்போகிறது என தெரியவில்லை.

இந்நிலையில் கார் வாங்கும் ஆவலில் பல வாடிக்கையாளர்கள் டாடா ஷோ ரூமை சுற்றி சுற்றி வருகிறார்கள். இவர்களுக்கு அடுத்த ஒரு மாதத்துக்குள் கார் கிடைத்து விடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விண்ணப்பித்த சிலருக்கு கார் கிடைக்க ஓராண்டு கூட ஆகலாம்.

சந்தையில் மூலப்பொருட்கள் விலையேற்றம் காரணமாக டாடா இன்னும் எவ்வளவுக்கு நாட்களுக்கு இந்த காரை ரூ. 1 லட்சம் என்ற விலையி்ல் கொடுக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் பிசினஸ் ஸ்டேன்டர்டு பத்திரிகையின் மோட்டார் ஆசிரியர் பிஜோய் குமார் கூறுகையில்,

தரம் மற்றும் பாதுகாப்பு குறையாமல் ஒரு காரை குறைந்தவிலைக்கு தயாரிப்பது மிகவும் சவாலானது. அதே நேரத்தில் டாடா இன்னும் சில ஆண்டுகளுக்கு விலையை குறையாமல் வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. ஒரு வேளை சந்தையில் மூலப்பொருட்கள் விலை இன்னும் அதிகரித்து ஒரு காருக்கான உற்பத்தி விலை சுமார் ரூ 3 லட்சத்தை எட்டினால் டாடா அதை எப்படி 1 லட்சத்துக்கு விற்க முடியும் என்றார்.

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.