மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயையும், 2 மாத குழந்தையையும் காணவில்லை

வன்னியில் தாக்குதலில் படுகாயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் தாயொருவரும் அவரது 2 மாத குழந்தையும் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு முதல் காணாமல் போயுள்ளனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னரும் இந்த வைத்தியசாலையிலிருந்து இளம் தாயும் இரண்டு பிள்ளைகளும் காணாமல் போன நிலைலயில் இது போன்றதொரு சம்பவம் மீண்டும் இடம்பெற்றுள்ளது.

7ம் வார்ட்டில் சிகிச்சைபெற்று வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த நகுலேஸ்வரன் கிஷாந்தினி (வயது 23) அவரது இரண்டு மாத ஆண் குழந்தையான ந. சஞ்சீவன் ஆகிய இருவருமே புதன்கிழமை இரவு முதல் காணாமல் போயுள்ளனர்.

மன்னார் வைத்தியசாலையில் வன்னித் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் 400 க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளியார் எவரும் இவர்களைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படாததுடன் வைத்தியசாலையைச் சுற்றி 24 மணி நேரமும் படையினலும் பொலிஸாரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டு வருகையில் இவ்விருவரும் காணாமல் போனது குறித்து வைத்தியசாலை நிர்வாகம் நேற்றுக் காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

இவ்விருவரும் கடந்த 16ம் திகதி முல்லைத்தீவிலிருந்து கப்பல் மூலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து மன்னனர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

ஏற்கனவே கிளிநொச்சியிலிருந்து காயமடைந்த நிலையில் கொண்டு வரப்பட்டு மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் தாயும் அவரது இரு சிறுபிள்ளைகளும் கடந்த மாதம் 27ம் திகதி முதல் வைத்தியசாலையிலிருந்து காணாமல் போயுள்ளதும் தெரிந்ததே.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.