புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உக்கிர மோதல்கள்! 250 படையினர் பலி! பெருமளவான படையினர் காயம்: புலிகள் தரப்பு தெரிவிப்பு

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 250-க்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதுக்குடியிருப்பு மருத்துவமனையை அண்டிய பகுதிகள், புதுக்குடியிருப்பு – முல்லைத்தீவு வீதி, மற்றும் இரணைப்பாலைச் சந்தி ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களிலேயே 250-க்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

நாளாந்தம் பல நூற்றுக்கணக்கான படையினர் வன்னிக் களமுனையில் இருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். படையினருக்கு ஏற்பட்டு வரும் ஆளணி இழப்புகளை அடுத்து சிறீலங்காப் படையினர் பலர் மாறி மாறி படையணிகளுக்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

தென்னிலங்கையிலிருந்து ஊர்காவல் படையினரை வவுனியாவுக்கு வருவித்து, வவுனியாவில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினரை புதுக்குடியிருப்பு பகுதிக் களமுனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அத்துடன் காயமடைந்த படையினர் கொழும்பு வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதாகவும், கொழும்பு பொரளையிலுள்ள மலர்ச்சாலைகளுக்கு படையினரின் சடலங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14ம் நாளுக்குள் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு மகிந்த அரசாங்கத்திடம் இந்தியாவிலிருந்து காங்கிரஸ் கட்சி வலியுத்திய நிலையில் கடந்த சில நாட்களாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.