அம்பாறை மாவட்டத்தில் மாடு மேய்க்கச் சென்ற 4 தமிழர்களை காணவில்லை என தெரிவிப்பு

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட எல்லைப் பிரதேசத்தில் பாதுகாப்பு தரப்பினரிடம் அனுமதி பெற்று மாடு மேய்க்கச் சென்ற 4 பேர் தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 23 ம் திகதி புளுகண்ணாவ, மங்களகம, கெவிலியாமடு மற்றும் வக்கியெல்ல ஆகிய இடங்களில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த சுமார் 500 மாடுகளை மீண்டும் கொண்டு வர பாதுகாப்பு தரப்பின் அனுமதியை பெற்றே இந் நால்வரும் அங்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்திச்சேனையைச் சேர்ந்த பாலிப்போடி குணசேகரன் ( வயது 49 ) , மகிழடித்தீவைச் சேர்ந்த கதிர்காமப்போடி நேசதுரை (வயது 47 ) ,முனைக்காட்டைச் சேர்ந்த மார்க்கண்டு குணசிங்கம் (வயது 33),கொத்தியாபுலையைச் சேர்ந்த தம்பிராசா முருகேசு (வயது 45) ஆகிய இந் நால்வருமே காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் காணாமல்போயுள்ளமை தொடர்பாக பொலிஸ் நிலையத்திலும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.துரைரட்ணம் அவர்களிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் முறைப்பாடு தொடர்பாக துரைரட்ணம் அவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அக்கடிதத்தில் மாடுகளைத் தேடிச் சென்று காணாமல் போன 4 பேரையும் கண்டு பிடித்து தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், காணாமல் போயுள்ள 500 மாடுகளையும் மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இல்லையேல் அதற்கான நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.