அக்குரச குண்டுத்தாக்குதலின் எதிரொலி: ஒரு வாரத்தில் 250 தமிழர்கள் கைது

சிறிலங்காவின் மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரச கொடாப்பிட்டிய பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (10.03.09) அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து மாத்தறை உட்பட கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் 250 தமிழ் இளைஞர், பெண்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறை நகரிலும் அதனைச் சூழவுள்ள தெனியாய பிரதேசத்திலும் நடைபெற்ற தேடுதல் நடடிக்கையில் 130 பேர் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பிலும், சுற்றுப்புறங்களிலும் 120 தமிழ் இளைஞர், பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஆகியோரிடம் முறையிட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

காவல்துறையினரும் சிறப்பு அதிரடிப்படையினரும் வீதிகளிலும் வீடுகளிலும் நடத்திய தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.

மாத்தறையில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களில் அநேகமானோர் மாத்தறையில் உள்ள பலசரக்கு கடைகளிலும் மற்றும் வர்த்தக நிறுவனங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்கள் என அக்குரச காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளையில் கொழும்பிலும், சுற்றுப்புறங்களிலும் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த கைது நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு போன்றவற்றில் முறையிட்டுள்ளதாக கைதானவர்களின் உறவினர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

கைதானவர்களில் பலர் தெமட்டக்கொடையில் உள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.