மெதுவாக உயிர்த்தெழுகிறது பங்குச் சந்தை?

கடந்த இரண்டு வாரங்களில் சந்தைகளில் ஏற்படும் மாற்றம் பெரும்பாலும் எதிர்பார்த்தது என்றாலும், வியப்புக்குரியது. இரண்டு வாரத்திற்கு முன் 8,000 புள்ளிகள் வரை தொடவிருந்தது. ஆனால், நேற்று இறுதியாக 9,000த்தையும் தாண்டி சிறிது கீழே வந்து நிற்கிறது. இது தான் பங்குச் சந்தை. கடந்த வார லாபப் போக்கு திங்களன்றும் சந்தையில் இருந்தது. உலகளவில் சந்தைகள் நன்றாகவே இருந்ததால், இந்தியாவிலும் சந்தைகள் திங்களன்று மேலேயே துவங்கின. லாபமும் அனைவருக்கும் இருந்தது. சந்தையும் 187 புள்ளிகள் வரை மேலே சென்றது.


நேற்று முன்தினம் சந்தைகள் மேலே துவங்கினாலும், வந்த லாபமும் போய் முடிவாக நஷ்டத்தில் முடிந்தது. மெட்டல், கட்டுமானத் துறைகள் மேலே சென்றன. சாப்ட்வேர் பங்குகள் கீழே சென்றன. முடிவாக 79 புள்ளிகள் கீழே சென்றன. நேற்று துவக்கமும் மேலேயே இருந்தது. மறுபடியும் கட்டுமானத் துறை, மெட்டல் துறை பங்குகள் தான் ஏற்றத்திற்குக் காரணமாக இருந்தன. மதியத்திற்கு மேல் துவங்கிய லண்டன் பங்குச் சந்தை கீழேயே துவங்கியதால் இந்திய பங்குச் சந்தைகள் பெற்ற லாபத்தில் பெருமளவை இழந்தன. சாப்ட்வேர், எண்ணெய் பங்குகள் கீழே விழுந்தன. முடிவாக மும்பை பங்குச் சந்தை 112 புள்ளிகள் லாபத்தில் மட்டுமே முடிவடைந்தது.

சந்தை 1,000 புள்ளிகள் ஏறும் போது லாப நோக்கில் விற்பவர்களும் இருக்கத்தானே செய்வர். அதுவும் இருந்ததால் சந்தை சமாளிக்க முடியாமல் ஏற்றத்திலும் இறக்கம் கண்டது. முடிவாக மும்பை பங்குச் சந்தை 8,976 புள்ளிகளுடனும், தேசியப் பங்குச் சந்தை 2,794 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. அட்வான்ஸ் டாக்ஸ் கட்டிய தகவல்கள் வெளியாகியுள்ளது, சாதகமாகவும் – பாதகமாகவும் உள்ளது. வங்கிகள் அதிகமாகக் கட்டியுள்ளன. மற்ற கம்பெனிகளில் நிலைமை மேலும் – கீழுமாக உள்ளது. வங்கிகள் நல்ல முடிவுகளைத் தந்திருந்தாலும், வருங்காலங்களில் வராக்கடன்கள் குறையாமல் இருக்க வேண்டும் யார் சொன்னது, பொருளாதார மந்த நிலையால், பி.பி.ஓ., கம்பெனிகளுக்கு இனிமேல் வெளிநாடுகளிலிருந்து வேலைகள் கிடைக்காது என்று. எச்.சி.எல்., கம்பெனி 350 மில்லியன் டாலர் பெறுமான ஏழு ஆண்டு கான்ட்ராக்டை ரீடர்ஸ் டைஜஸ்டிமிருந்து பெற்றுள்ளது. இது இந்த மந்தமான சூழ் நிலையில் ஒரு அருமையான செய்தி.

அமெரிக்காவில் எழுச்சி: அமெரிக்கப் பொருளாதாரம் எப்போதுமே செலவழிக்கும் பொருளாதாரம் தான். கடன் வாங்கியும் செல்வழிப்பவர்கள் உள்ள நாடு. அதனால் தான் அங்கு சிறிது மந்தம் ஏற்பட்டவுடன் அது உலகெங்கும் பயத்தை ஏற்படுத்தியது. அங்கு தற்போது நிலைமைகள் சிறிது சிறிதாக மேலே தலைதூக்கிப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றன என்று செய்திகள் வருகின்றன. பத்து ரூபாய் கிடைத்தாலும் அதில் இரண்டு ரூபாய் சேமிப்பவர்கள் நாம். செலவுகள் வரவுகளை மீறி பெரும்பாலும் இருக்காது. தற்காலங்களில் இரண்டு பேரும் சம்பாதிக்கும் நிலை வந்தவுடன் மேலை நாட்டுக் கலாசாரத்தை மெதுவாக கொண்டு வந்து விட்டோமோ என்ற பயமும் நமக்கு ஏற்படுகிறது. சந்தை எப்படி இருந்தாலும் மியூச்சுவல் பண்டுகளின் எஸ்.ஐ.பி., (தொடர்ந்த முதலீடு)களில் போடுவது நல்லது என்று லட்சக்கணக்கானவர்கள் போட்டு வந்தனர். சந்தையும் அது போல கடந்த ஆண்டு ஜனவரி வரை மேலேயே சென்றது. அதன் பின் குறைந்த வேகம் தான் அனைவருக்கும் தெரிந்தது. குறைந்து வரும் வேகத்தைப் பார்த்து தொடர்ந்து முதலீடு செய்த பலரும் நிறுத்தி விட்டனர். அதுபோல நிறுத்தியவர்கள், ஐந்து லட்சத்திற்கும் மேலாக இருக்கின்றனர் என்ற செய்திகள் வருகின்றன.

வரும் நாட்கள் எப்படி இருக்கும்?: சரிவுகளை வாய்ப்புகளாக பாருங்கள். அப்படி பார்ப்பவர்களுக்கு இந்தச் சந்தையும் இனிக்கும். வரும் நாட்களும் சந்தை சிறிது மேலே இருக்க வாய்ப்புகள் அதிகம். அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் கூட்டத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதும் சந்தையின் போக்கை தீர்மானிக்கும்.

Source & thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.