நியூயோர்க்கில் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவர் அலுவலகம் முன்பாக ‘உரிமைக்குரல்’: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் நேற்று முன்நாள் நடைபெற்ற உணர்வுபூர்வமான எழுச்சி கவனயீர்ப்பு நிகழ்வுகளின் வரிசையில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் தமிழர்கள் ‘உரிமைக்குரல்’ கவனயீர்ப்பு நிகழ்வு நடத்தியுள்ளனர்.

நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவரின் அலுவலகம் முன்பாக நேற்று முன்நாள் திங்கட்கிழமை இக்கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.

அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவர் கலாநிதி சூசன் றைசிடம் ஈழத் தமிழர் துயர் துடைக்க உதவுமாறு அமெரிக்க வாழ் தமிழர்கள் முழுக்கம் எழுப்பினர்.

கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் அமெரிக்க கொடிகளையும், தமிழீழத் தேசியக் கொடிகளையும் தாங்கியிருந்தனர்.

தமிழீழ சுதந்திரத்தினை அங்கீகரிக்கக் கோரியும், “எங்கள் தலைவர் பிரபாகரன்” எனவும் முழக்கங்கள் எழுப்பினர்.

இக்கவனயீர்ப்பு நிகழ்வு தொடர்பாக ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட மனுவில்,

உலகின் எந்த நிறுவனத்தினதும் அமைப்பினதும் போர் நிறுத்த வேண்டுதலுக்கோ அன்றி மனித உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகளுக்கோ சிறிலங்கா அரசாங்கம் செவிசாய்ப்பதில்லை என சுட்டிககாட்டப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரின் போது யூத இன மக்களை நாசிசவாதிகள் இனப் படுகொலை செய்தது போன்றதற்கு நிகரான கொடூரத்திலேயே ஈழத் தமிழர்களயும் சிறிலங்கா அரசாங்கம் கொல்வதாகத் தெரிவித்து – ஈழத் தமிழ் மக்களை வதை முகாம்களில் அடைக்கும் சிறிலங்கா அரசின் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவும் துணை போகக்கூடாது எனவும் கோரப்பட்டிருந்தது.

சிறிலங்காவிற்கு சிறப்பு சமாதானத் தூதுவரை அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா நியமனம் செய்யவும், உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட்டு – பேச்சுவார்த்தை மூலம் சுயநிர்ணய உரிமை பெற்ற சுதந்திரத் தமிழீழம் மலர்ந்து சமாதானம் நிகழவும் கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து கொண்டோர் கோரிக்கை விடுத்தனர்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.