கிழக்கில் கைப்பற்றிய பிரதேசங்களில் சிறிலங்கா அரசு பொருளாதார தடை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து சிறிலங்கா படையினர் கைப்பற்றிய பிரதேசங்களில் மகிந்த அரசாங்கம் பொருளாதார தடை விதித்துள்ளது. அத்துடன் நாளுக்கு நாள் புதிய, புதிய கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்படுவதாகவும் உள்ளுர் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் மீது திணிக்கப்படும் புதிய கட்டுப்பாடுகளினால் சாதாரண மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்குகின்றனர் என்றும் அங்கு சென்று வந்த பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரையில் உள்ள கரடியனாறு, தாத்தாமலை, உன்னிச்சை, மாவடிஓடை மற்றும் வாகரையில் உள்ள மதுரங்குளம், குஞ்சங்குளம் போன்ற மிகவும் பின் தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உணவுப்பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளையில் சிறிலங்கா படையினர் தமது வசதிக்கும் விருப்பங்களுக்கு எற்பவும் நாளுக்கு வெவ்வேறுபட்ட புதிய நடைமுறைகளை முன்னறிவித்தல் எதுவும் இன்றி அறிவிப்பதனால் மக்கள் செய்வதறியாது அவதிப்படுகின்றனர் என்று பிரதேச அரச அதிகாரிகள் கூறுகின்றனர்.

குடும்பத்தில் நான்கு பேர் இருப்பார்களாயின் அவர்கள் ஒரு நாளைக்கு நான்கு சுண்டு அரிசியை மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும். அவ்வாறே பால்மா வகைகள் மற்றும் ரின்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகள், குளிர்பானங்கள் போன்றவற்றை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வாங்கவோ அல்லது அப்பகுதிக்கு கொண்டு செல்லவோ முடியாதவாறும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்றும் அரச அதிகாரிகள் முறையிடுகின்றனர்.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட படை அதிகாரிகளிடம் கேட்ட போது, அவ்வாறான புதிய, புதிய கட்டுப்பாடுகள் மேலிடத்து உத்தரவு என தெரிவிப்பதாகவும் அரச அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது இவ்வாறிருக்க, அப்பகுதியில் மேய்ச்சல் தரைகளுக்கு கால்நடைகளை கொண்டு செல்வதற்கு ஏற்கனவே சிறிலங்கா படையினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இந்நிலையில் பல கால்நடைகள் காடுகளில் அநாதரவாக நடமாடுவதாகவும் அவற்றை உரியவர்கள் மீள பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது என்றும் கிராமசேகவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக கால்நடை வளர்ப்பாளர்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் என்றும் கிராமசேவகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.