இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி!-கலாமின் சிஷ்யை டெஸி!

சென்னை: இந்தியாவின் முக்கிய ஏவுகணைகளில் ஒன்றான அக்னி ஏவுகணைத் திட்டத்தின் இயக்குநராக பெண் விஞ்ஞானி டெஸி தாமஸ் பணியாற்றி வருகிறார். இவர் அப்துல் கலாமின் சிஷ்யை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முப்பைடகளுக்கும் தேவையான பாதுகாப்பு தளவாடங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வடிவமைக்கும் பொறுப்பு டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் பணியாகும்.

இங்குதான் இந்தியாவின் ஏவகணைகளான அக்னி, ஆகாஷ், பிரமோஸ், தனுஷ், பிரித்வி, திரிசூல் உள்ளிட்டவையும், அர்ஜூன் ரக பீரங்கிகளும் வடிவைக்கப்பட்டன.

இப்படிப்பட்ட முக்கிய பணியை ஆற்றி வரும் டி.ஆர்.டி.ஓ, அக்னி ரக ஏவுகணைகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகமை அக்னி. அக்னி1 ரக ஏவுகணை 800 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கக் கூடியதாக இருந்தது. பின்னர் மேம்படுத்தப்பட்ட அக்னி-2 ஏவுகணை 2000 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக் கூடியது.

இப்படிப்பட்ட முக்கிய திட்டத்தின் இயக்குநராக பெண் விஞ்ஞானி டெஸி தாமஸ் பொறுப்பேற்ற திறம்பட செயல்பட்டு வருகிறார். அக்னி-2 ஏவுகணையின் தாக்கும் திறனை 2,500 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிகரிக்கும் வகையில் அக்னி-2-ஏ உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் இயக்குனராக டெஸி பணியாற்றி வருகிறார். அக்னி ஏவுகணை திட்டத்தின் முதல் பெண் இயக்குனர் டெஸி என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸி தாமஸ், ஏற்கனவே, அக்னி-1, அக்னி-2, அக்னி-3 ஆகிய திட்டங்களில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

அக்னி-2 திட்டத்தில் இருந்தபோது, 2006ம் ஆண்டு அக்னி-2 ஏவப்பட்டபோது அது தோல்வியில் முடிந்தது. இதையடுத்து தோல்விக்கு என்ன காரணம் என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு தொழில்நுட்பத் தவறை டெஸி கண்டுபிடித்து தெரிவித்தார்.

இதையடுத்து அந்த தவறு சரி செய்யப்பட்டு, 2007ம் ஆண்டு மீண்டும் அக்னி-2 ஏவப்பட்டபோது அது வெற்றியில் முடிந்தது. இதனால் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகளின் பாராட்டுக்களை அள்ளினார் டெஸி.

டெஸிக்கு இன்னொரு பெருமையும் உள்ளது. அப்துல் கலாமின் தலைமையின் கீழ் பணியாற்றிய பெருமைக்குரியவர் டெஸி. அக்னி திட்டத்தில் அப்துல் கலாம் இருந்தபோது, அவருக்குக் கீழ் பணியாற்றினார் டெஸி. 1988ம் ஆண்டு முதல் டெஸி, டி.ஆர்.டி.ஓவில் பணியாற்றி வருகிறார்.

டெஸியின் திறமைகளைக் கண்ட கலாம் அவரை ஊக்குவித்துப் பாராட்டியுள்ளார்.

கேரள மாநிலம், ஆலப்புழையைச் சேர்ந்த டெஸி, திருச்சூர் அரசு பொறியியல் கல்லூரியில் பி.டெக் முடித்தவர். பின்னர் புனேவில் எம்.டெக் படித்தார்.

தற்போது 45 வயதாகும் டெஸி தாமஸ், ஓய்வு என்றால் என்ன என்று கேட்பவர். அந்த அளவுக்கு ஓய்வே இல்லாமல் உழைப்பதில் சலிக்காதவர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சிந்தனைகளுக்கு ஓய்வு என்பது எப்படி கிடையாதோ அதேபோல்தான் விஞ்ஞானிகளுக்கும் ஓய்வு என்பதே கிடையாது. அவர்கள் கடைசி வரை ஏதாவது ஒன்றை செய்துகொண்டே இருப்பார்கள் என்றார்.

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களது ஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.