புதுக்குடியிருப்பில் கடந்த 3 நாள் மோதல்களில் 610 படையினர் பலி; 700 பேர் காயம்: புலிகள் தெரிவிப்பு; இரணைப்பாலை சந்திக்குள் பிரவேசம்: படைத்தரப்பு

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் மோதல்களில் சிறிலங்கா படையினர் தரப்பில் 610 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 700 வரையான படையினர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்முனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:

புதுக்குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதியில் பல முனைகளில் முன்நகர்வுகளை மேற்கொண்ட சிறிலங்கா படையினரை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா படையினரின் நகர்வுகளுக்கு எதிராக நேற்று திங்கட்கிழமையும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையும் விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இத்தாக்குதல்களில் சிறிலங்கா படையினர் தரப்பில் 402 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதியில் இன்று செவ்வாயக்கிழமையும் உக்கிர மோதல் நடைபெற்றது. இம் மோதலின் போது சிறிலங்கா படையினர் தரப்பில் 208 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 700 வரையான படையினர் காயமடைந்துள்ளனர்.

மோதல்களின் போது சிறிலங்கா படையினர் அதிகளவிலான வெடிபொருட்களை பயன்படுத்தி வருகின்றனர் என போர்முனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது இவ்வாறிருக்க, புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப் புலிகள் கரும்புலித் தாக்குதல் நடத்தியுள்ளனர் என சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ள போதிலும் படையினருக்கு ஏற்பட்ட இழப்பு விபரம் எதனையும் சிறிலங்கா படைத்தரப்பு இதுவரை வெளியிடவில்லை.

மோதல் தொடர்பாக பாதுகாப்புத்தரப்பு வெளியிட்டுள்ள தகவல்

முல்லைத்தீவு மாவட்டத்தைக் கைப்பற்றுவதற்கான தீவிர முன்னகர்வு முயற்சியில் ஈடுபட்டு வரும் படையினர் இன்று பிற்பகல் இரணைப்பாலை சந்திக்குள் பிரவேசித்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்தது. இராணுவத்தின் 58ஆவது படையணியினரே தமது தீவிர முன்னேறற முயற்சியின் பயனாக அப்பகுதிக்குள் பிரதேவசித்துள்ளனர்.

இதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும் இரு தரப்புக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

மோதல்களை அடுத்து படையினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலி உறுப்பினர்களின் 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஆயுதங்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

இதனைனையடுத்து பின்னகர்ந்து சென்றுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் அனைவரும் தற்போது அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தை அண்டிய பகுதியிலேயே முடக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி முன்னகர்ந்து செல்லும் படையினரின் முன்னேற்ற முயற்சியினை முறியடிக்கும் வகையில் புலிகளால் கடும் எதிர்ப்புத் தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.