புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் குண்டுதாரி இராணுவ உடையில் வந்தாராம்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


ஆயினும் இந்த தாக்குதலில் படைத்தரப்புக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இராணுவ சீருடைக்கு சமனான ஆடையணிந்த ஒருவரே இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி வந்து குண்டினை வெடிக்க வைத்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் இராணுவப் பேச்சாளர் தொடர்ந்தும் கூறியதாவது புதுக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களின் போதே இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

குறித்த பகுதியில் இராணுவ முன்னெடுப்புக்களில் ஈடுபட்டு வரும் இராணுவத்தின் விஷேட படையணியைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரால் மேற்படி தற்கொலைக் குண்டுதாரி இனங்காணப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவரை அழைத்து சோதனையிட முற்படுவதற்கிடையில் குறித்த குண்டுதாரி தனது உடலில் மறைத்து வைத்திருந்த குண்டினை வெடிக்க வைத்துள்ளார்.

இதனால், குறித்த குண்டுதாரி உடல் சிதறி பலியாகியுள்ளார். சம்பவத்தை அடுத்து தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ரீ56 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது.

சம்பவத்தை அடுத்து படையினரால் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த சோதனை நடவடிக்கைகள் அனைத்தும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் மறைத்துள்ள விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீதாக தாக்குதல்களும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.