தப்பிச்சென்ற அகதிகள் படகு மீது படையினர் தாக்குதல்: சிறுவன் பலி; மேலும் ஒருவர் காயம்

முல்லைத்தீவு புதுமாத்தளன் பிரதேசத்தில் இருந்து படகு மூலம் வடமராட்சிக்கு தப்பிச்சென்ற பொதுமக்கள் மீது படையினரால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 9 வயதான சிறுவன் கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்ட சிறுவன் தேவநாயகம் தனுசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட சிறுவனின் சடலத்தை பருத்தித்துறை நீதவான் பார்வையிட்டபின் பிரேத பரிசோதனைக்காக மந்திகை வைத்தியசாலைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.

குறித்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்று மாலை சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட சிறுவனுடைய தந்தை நாகதம்பி தேவநாயகம் தாயார் தேவநாயகம் ரேணுகா ஆகிய இருவரும் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தபோதும், அவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இத்தாக்குதலின்போது இவர்களுடன் படகில் சென்ற உறவினர் ஒருவர் காயமடைந்து மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் படகுகளில் வந்தவர்கள் அனைவரும் கைதடி நலன்புரி நிலையத்திற்கு படையினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவனின் சடலத்தை அடக்கம் செய்வதற்காக மட்டும் அவரது பெற்றோரும் இன்னும் சிலரும் அவர்களின் உறவினர் ஒருவரது வீட்டுக்கு செல்ல படையினர் அனுமதித்ததாகவும், கொல்லப்பட்டவரின் சடங்குகள் முடிவடைந்தவுடன் அவர்களையும் கைதடி நலன்புரி முகாமுக்கு வருகை தரவேண்டும் என்று படையினரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.