நானோ காருக்கு விண்ணப்ப விலை ரூ. 300

நானோ கார் வாங்க விரும்புபவர்கள் ரூ.300 செலுத்தி விண்ணப்பத்தை வாங்க வேண்டும். கார் ஒதுக்கீடு செய்ய்பபடாதவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் திருப்பி வழங்கப்படும்.

டாடா மோட்டார் நிறுவனத்தின் குறைந்த விலைக் காரான நானோ நானோ கார் விற்பனை மார்ச் 23 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு முன் பதிவு மார்ச் மாதக் கடைசி அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்கும்.

இதன் விண்ணப்பங்களை விற்பனை செய்யும் உரிமையை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பெற்றுள்ளது. விண்ணப்பம் ரூ.300 க்கு விற்பனை செய்யப்படும். விண்ணப்பிப்பவர்களுக்கு கார் ஒதுக்கப்படாவிடில், விண்ணப்பக் கட்டணமான ரூ. 300 திருப்பித் தரப்படும்.

விண்ணப்பங்கள் பல்வேறு முறைகளில் விநியோகிக்கப்பட்டாலும், எல்லா விண்ணப்பங்களும் பாரத ஸ்டேட் வங்கியில் மட்டுமே ஒருங்கிணைக்கப்படும். விண்ணப்பங்கள் மற்றும் கட்டணங்கள் அனைத்தும் பாரத ஸ்டேட் வங்கி கணக்குக்கு மாற்றப்படும்.

வங்கிக் கடன் மூலம் இந்தக் காரை வாங்க விரும்புவோருக்கு 90 நாட்களில் கடன் வழங்கப்படும்.

நானோ காரை வாங்குவதற்கு அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வரும் என்பதால் பாரத ஸ்டேட் வங்கி தேர்வு செய்யப்பட்டதாக டாடா மோட்டார்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிறுவனம் ஏற்கனவே பல்வேறு வங்கிகளுடன், காருக்கான கடனை வழங்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

ஏற்கெனவே வாகனக் கடனுக்கு வசூலிக்கப்படும் வட்டித் தொகையைக் காட்டிலும் “நானோ’ காருக்கான வட்டி குறைவாக இருக்கும் என்று எஸ்பிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

நானோ காருக்கு கடன் வழங்குவதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா உட்பட பல வங்கிகள் ஒப்பந்தம் செய்துள்ளன.

இதேபோல பல பொதுத்துறை வங்கிகளுடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது. இதன் மூலம் அனைத்துத் தரப்பினருக்கும் எளிய வகையில் கடன் கிடைக்க ஏற்பாடு செய்து வருவதாக டாடா மோட்டார்ஸ நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

டாடா நிறுவனம் முதலாண்டில் ஒரு லட்சம் நானோ கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. குஜராத்தில் அமைக்கப்பட்டு வரும் தொழிற்சாலை செயல்படத் தொடங்கியவுடன், அதிக அளவு உற்பத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தில் தொழிற்சாலையில் வருகின்ற அக்டோபர் மாதத்தில் இருந்து கார் தயாரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை டாடா மோட்டார்ஸின் புனே, பந்த் நகர் தொழிற்சாலைகளில் நானோ கார் தயாரிக்கப்படும்.

Source & Thanks : tamil.webdunia

Leave a Reply

Your email address will not be published.