வன்னியில் சிறிலங்கா படையினரின் வான், எறிகணைத் தாக்குதல்களில் 64 பொதுமக்கள் பலி; 106 பேர் படுகாயம்

வன்னியில் உள்ள மக்கள் பாதுகாப்பு வலய பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தினர் நேற்று திங்கட்கிழமை நடத்திய எறிகணை மற்றும் விமான தாக்குதல்களில் 64 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இத்தாக்குதலில் செஞ்சிலுவைச் சங்க பணியாளர் 106 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மக்கள் பாதுகாப்பு வலய பிரதேசங்களான மாத்தளன் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருப்புகள் மீது திங்கட்கிழமை இரவு இலங்கை இராணுவத்தினர் ஆட்லறி எறிகணை, பல்குழல் பீரங்கி மற்றும் மோட்டார் தாக்கதல்களை நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் 39 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 64 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதேபோல் முள்ளிவாய்க்கால் மக்கள் பாதுகாப்பு வலய பகுதியில் உள்ள மக்கள் இருப்பிடங்கள் மீது இலங்கை இராணுவத்தின் விமான படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 5 வீடுகளும் முற்றாக அழிந்து நாசமாகியுள்ளன.

மேலும் இலங்கை இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

அத்துடன் நேற்று முன்தினம் ஞாயிறு இரவு படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் பாதுகாப்ப வலய பிரதேசங்களான இடைக்காடு, மாத்தளன் பகுதியில் உள்ள பொதுமக்களில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 22 பேர் காயத்திற்குள்ளாகினர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுமாத்தளனில் இயங்கிவந்த ஒரேயொரு வைத்தியசாலையும் மருந்துப் பொருட்கள் இன்றி மூடப்பட்டுள்ளதனால் காயங்களுக்கு சிகிச்சையின்றி படுகாயத்திற்குள்ளானோரில் பலர் உயிரிழக்க நேர்ந்துள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.