இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற வழக்கா? இங்கு ஐ.நா. அலுவலகம் முற்றுகையிடப்படும்! எச்சரிக்கிறார் விமல் வீரவன்ச

விடுதலைப்புலிகளுக்கு சார்பானவர்கள் முன்வைக்கும் பொய்யான குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக வைத்து இலங்கைக்கு எதிராக போர்க் குற்ற வழக்கை ஐ.நா தாக்கல் செய்யுமானால், இலங்கையில் உள்ள ஐ.நா அலுவலகம் மக்களால் முற்றுகையிடப்படும். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இப்படிக் கூறினார்.

இலங்கையையும் சூடான் நாட்டைப் போல் மாற்ற சர்வதேச நாடுகள் பல எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுவார்கள் என்றும் அவர் கூறினார்.

விடுதலைப்புலிகளை முழுமையாக ஒழித்துக்கட்டும் யுத்தத்தில் இறுதிக் கட்டத்தில் தற்போது அரசு உள்ளது. இந்த நிலையில் மக்களுக்கு பின்னால் ஒளித்துக் கொண்டு நின்று புலிகள் தாக்குதல்களை நடத்துகிறார்கள்.

யுத்தத்தை நிறுத்துவதன் மூலமாகவோ தாமதிப்பதன் மூலமாகவோ மக்களை மீட்க முடியாது. புலிகளை முழுமையாக அழித்துத்தான் மக்களை மீட்க முடியும்.

இந்த நிலையில் அரசுக்கு எதிராக புலிகளின் ஆதரவாளர்கள் பொய்க் குற்றச்சாட்டுக்களை பரப்பி வருகிறார்கள் அவற்றைக் கருத்தில் எடுத்து இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடர ஐ.நா முயற்சிக்கக் கூடாது என்றார் அவர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.