இலங்கை ராணுவத்திற்கு மேலும் வீரர்கள் சேர்ப்பு

கொழும்பு: இலங்கை ராணுவத்தின் செயல்பாடுகள் அதிகரித்து வருவதால், ராணுவத்திற்கு மேலும் ஏராளமான வீரர்கள் சேர்க்கப்படுவர் என்று ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

கொழும்பு அம்பேபுஸ்ஸா என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ராணுவத்தின் பலம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் பல்வேறு வெற்றிகள் கிடைத்துள்ளன.

இதன் காரணமாக ராணுவத்திற்கு மேலும் பலரை எடுக்கவுள்ளோம்.

நாட்டின் பாதுகாப்புக்கு விடுக்கப்படும் எந்தவித மிரட்டலையும் சமாளிக்கும் வகையிலான ராணுவமாக இலங்கை ராணுவம் திகழும்.

கடந்த காலங்களில் போர்க்களத்தில் வீரர்கள் ஆற்றிய பணி, சேவை மகத்தானது. ஓய்வுக்குப் பின்னர் அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்க அரசு உதவும். ராணுவத்தினர் மீதான மக்களின் எண்ணமும் கூட பெருமளவில் மாறியிருக்கிறது.

வீரர்களின் ஓய்வூதியத்தை, அவர்களது சம்பளத்தின் 85 சதவீதமாக உயர்த்திட நடவடிக்கை எடுத்துள்ளார் அதிபர் ராஜபக்சே என்றார் பொன்சேகா.

ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கப் போவதாக கூறுகிறார் பொன்சேகா. ஆனால் வடக்கில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் உயிரிழந்திருப்பதால்தான் ஆள்பற்றாக்குறையை சமாளிக்க மேலும் பல வீரர்களை இலங்கை ராணுவம் எடுப்பதாக கருதப்படுகிறது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.