புலிகளுக்கு எதிரான படை நடவடிக்கைகளை இடைநிறுத்தும் சாத்தியம் இல்லை; அது குறித்துச் சிந்திக்கவும் முடியாது: ஜனாதிபதி

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் அது குறித்து ஒருபோதும் சிந்திக்கவும் முடியாது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பின்னணியில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உட்படாத, பாதுகாப்பான பகுதிகளுக்குள் சென்றதும், தற்காலிக தாக்குதல் தவிர்ப்புக்கு நான் தயார் என “ஏசியன் டிபியூன்” இணையத்தளத்திற்கு வழங்கிய பேட்டியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டவை வருமாறு:

விடுதலைப்புலிகள் , தாக்குதல் தவிர்ப்புக் கால எல்லையை மதித்து நடப்பார்கள் என்பதற்கான உத்தரவாதம் எதுவுமில்லையெனவும், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டால் இயல்பாகவே யுத்தநிறுத்தம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வன்னியில் மோதலில் சிக்கியுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காகவும் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்காகவும் இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு சர்வதேச சமூகம் வேண்டுகோள் விடுத்து வருவது தெரிந்ததே.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இவ்வாறு அரசு அறிவிக்கும் இடைநிறுத்த அறிவிப்பை விடுதலைப் புலிகள் மதிப்பார்கள் என்பதற்கான உத்தரவாதம் இல்லை.

ஜனவரி 30ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக இலங்கை அரசு 48 மணித்தியால கால அவகாசத்தை வழங்கியது. எனினும், விடுதலைப் புலிகள் இதற்கு சாதகமான சமிஞ்ஞைகளை வெளிப்படுத்தாததுடன் அப்பாவிப் பொதுமக்கள் வெளியேறவும் அனுமதிக்கவில்லை.

மேலும் இலங்கை இராணுவத்தைத் தாக்குதலை இடைநிறுத்துமாறு பணித்த 24 மணி நேரம் முடிவடைவதற்குள் விடுதலைப் புலிகள் எமது முன்னரங்குகளைத் தாக்கியதுடன் 150 இராணுவத்தினரைப் படுகாயப்படுத்தினர்.

தாக்குதல் தவிர்ப்புக் காலமொன்று நடைமுறையாவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. 48 முதல் 72 மணி நேர தாக்குதல் தவிர்ப்புக் காலத்தை அறிவிப்பது யுத்த நிறுத்தத்திற்கு சமன். இவ்வாறான நடவடிக்கை அர்த்தமற்றது. மற்றொரு சந்தர்ப்பத்தை எவ்வாறு வழங்குவது?

எமது முன்னைய அறிவிப்பை மதிக்காமல், எனது கட்டளைப்படி 48 மணித்தியாலங்கள் தாக்குதல் தவிர்ப்பினை மேற்கொண்ட எமது படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு, அவர்களைக் காயப்படுத்திய பிரபாகரன் மற்றும் அவர்களது உறுப்பினர்களுக்கு எவ்வாறு மற்றுமொரு சந்தர்ப்பத்தை வழங்குவது?

தற்போதைய சூழலில் நாங்கள் யுத்த நிறுத்தம் அல்லது தாக்குதல் தவிர்ப்பு காலம் குறித்து சிந்திக்க முடியாது. தாக்குதல் தவிர்ப்பு காலப் பகுதியில் எமது படையினர் தாக்கப்பட்டால் அதற்கு நானே பொறுப்புக் கூறவேண்டும்.

எனினும், எமது படையினர் பாதுகாப்பான பகுதிக்குள் சென்றவுடன், எதிரியின் தாக்குதல்கள் அவர்களுக்குத் தீங்கு விளைவிக்காது என்ற நம்பிக்கை ஏற்பட்டவுடன், நாங்கள் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக மற்றுமொரு மோதல் தவிர்ப்பு கால எல்லையை அறிவிப்போம்.

இலங்கை அரசு ஏற்கனவே இரண்டு பாதுகாப்பு வலயங்களை அறிவித்துள்ளது. அந்தப் பாதுகாப்பு வலயங்கள் ஊடாக எவரும் இராணுவத்திடம் பாதுகாப்புக் கோரலாம். விடுதலைப் புலிகளும் வரலாம்.

அரசு பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு அனைத்தையும் செய்கிறது. பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள வேண்டாமென இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரபாகரனும் அவரது உறுப்பினர்களும் பொதுமக்களை வெளியேற அனுமதிப்பதில்லை. அவர்கள் தப்பியோடும் பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொள்கின்றனர்.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தொலைபேசி உரையாடலின்போது அரசியல் தீர்வொன்றை உருவாக்குமாறு என்னைக் கேட்டார். தொடரும் மோதல்களை ஆதரிக்காத தமிழ் மக்களை உள்வாங்குவதற்காக யோசனையொன்றை முன்வைக்குமாறு கோரினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மூன்று தடவைகள் பேச்சுக்கு அழைத்தேன். அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் காரணமாகவே பேச்சுமூலமான தீர்வு முயற்சிகள் தாமதமடைகின்றன.

விடுதலைப் புலிகளின் தலைவரின் உத்தரவின் காரணமாக அவர்கள் இதற்கு இணங்கவில்லை. இலங்கை அரசுடன் பேச்சுகளை மேற்கொள்ள வேண்டாமென பிரபாகரன் கடும் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி என்ற வகையில் நான் அவர்களுக்கு பேச்சிற்கான அழைப்பை விடுக்கிறேன். எனினும் அவர்கள் தமிழ்நாட்டுத் தலைவர்களையும் சர்வதேச சமூகத்தையும் எம்முடன் பேசுமாறு அழைக்கின்றனர்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தமது யோசனைகளை முன்வைத்து எம்முடன் பேச முன்வராதபோது எப்படித் தமிழ் சமூகம் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை உருவாக்க முடியும் என்றும் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாங்கள் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி செவிமடுக்கத் தயாராகவுள்ள போதிலும் அவர்கள் அதற்குத் தயாரில்லை” என்றார் அவர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.