திருகோணமலை வர்ஷாவின் கொலையில் கருணா குழுவினர் தொடர்பு: விசாரணையில் அம்பலம்

திருக்கோணமலை பாலையூற்று பகுதியில் கடந்த புதன்கிழமை கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட யூட் ரெஜி வர்ஷாவின் இறுதிச் சடங்குகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கொலைச் சம்பவத்தில் கருணா குழுவினனருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணைகள் மூலம் அறியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இக் கொலைச் சம்பவத்தில் காவற்துறையினரால் கைது செய்ப்பட்ட சந்தேக நபரான மேர்வின் டியூரின் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை தெரிந்ததே.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 5 பேர் திருக்கோமணலை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். கருணா அமைப்பின் திருக்கோணமலை பொறுப்பாளர் ஜனார்த்தனும் கைது செயப்பட்டவர்களில் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவரான மேர்வின் என்பவருக்கும் கருணா அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகின்றது.

அத்துடன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட கருணா அணி முக்கியஸ்தர் ஜனார்த்தனனுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தவர் எனவும் திருகோணமலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரிடம் இருந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியை காவற்துறையினர் தேடிவருகின்றனர்.

கடந்த 11 ஆம் திகதி பாலையூற்றை சேர்ந்த 6 வயதான வர்ஸா என்ற சிறுமி திருகோணமலை சென் மேரிஸ் பாடசாலையில் இருந்து கடத்தி செல்லப்பட்டார். பின்னர் இவரை விடுவிக்க 3 கோடி ரூபா கப்பம் கோரப்பட்டு அது 10 இலட்சம் ரூபா வரை குறைக்கப்பட்டது 10 இலட்சம் ரூபாவை கொடுத்து சிறுமியை மீட்க தாய் தயாரான போது சிறுமி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.