திருகோணமலை சிறுமி வர்ஷா கொலையின் பிரதான சந்தேகநபர் சுட்டுக்கொலை

திருகோணலையில் 6 வயது சிறுமியை கப்பத்திற்காக கடத்திச்சென்று கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இன்று நண்பகல் 12.05 அளவில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


கடந்த 11 ஆம் திகதி பாலையூற்றை சேர்ந்த 6 வயதான வர்ஸா என்ற சிறுமி திருகோணமலை சென் மேரிஸ் பாடசாலையில் இருந்து கடத்தி செல்லப்பட்டார்.

பின்னர் இவரை விடுவிக்க 3 கோடி ரூபா கப்பம் கோரப்பட்டு பின்னர் அது 10 இலட்சம் ரூபா வரை குறைக்கப்பட்டது

இந்தநிலையில் 10 இலட்சம் ரூபாவை கொடுத்து சிறுமியை மீட்க தாய் தயாரான போது சிறுமி கொலை செய்யப்பட்டார்

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதில் சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படும் 25 வயதான ரினவுட் என்பவரை இன்று பொலிஸார் வைத்திய பரிசோதனைக்குட்படுத்த அழைத்து சென்ற போது அவர் தமது கைவிலங்கினால்,காவலுக்கு வந்த பொலிஸ்காரரின் கழுத்தை நெரித்துள்ளார்.

இதன் போது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பிரதான சந்தேக நபர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரால் கழுத்து நெரிக்கப்பட்டதாக கூறப்படும் பொலிஸ்காரர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-

இக்கொலை தொடர்பாக முன்னர் எமக்கு கிடைத்த தகவலின்படி மூன்று கோடி ரூபா பணத்தை கப்பம் பெற கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட ஜுட் றெஜி வர்ஷா (6 வயது) வின் கொலை தொடர்பாக பொலிஸார் 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் நால்வரை கைது செய்துள்ளார்கள்.

அவர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் வர்ஷாவின் பாடசாலை பை , தண்ணீர் போத்தல் உட்பட சில பொருட்களை கண்டெடுத்துள்ளதாக திருகோணமலை பொலிஸ் அதிகாரி வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அக்கொலை தொடர்பான ஒருவர் ஒரு மாதத்துக்கு மேல் வர்ஷாவுக்கு கணனி கற்பிப்பதற்கு என்று வீட்டுக்கு வந்து சென்ற இளைஞர் என சிறுமியின் உறவினர்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சிறுமியின் கொலை தொடர்பான வைத்திய பரிசோதனையின் பின் வர்ஷா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி வாஸ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் உடலத்தை கண்டெடுத்த போது அவரது வாய்க்குள் துணிகள் திணிக்கப்பட்டு பிளாஸ்டரால் ஒட்டப்பட்டிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கொலை தொடர்பான முக்கிய சந்தேக நபர், கணனி பயிற்சியாளரும் சிகரம் இணைய வானோலி நடத்துனர் என்பதும் தெரிய வந்த பின்னர் அந்நபரிடமிருந்து சிகரம் பணிப்பாளர் என அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஊடகவியலாளருக்கான அடையாள அட்டையும் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

சிகரம் இணைய வானோலி மூலம் சிறுவர்களது நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளதாகவும், திருகோணமலை சிவன் கோவில் அருகாமையிலேயே இவரது இணைய வானொலி சேவை செயற்படுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனது வானொலியை விரிவுபடுத்துவதற்காகவே தாம் குழந்தையைக் கடத்தி கப்பம் கேட்டதாக அவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்படவர்களில் மற்றுமொரு இளைஞர் திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தின் பெண் பொலிஸ்காரர் ஒருவரின் மகன் எனவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

வர்ஷாவின் குடும்பத்தினர் தமிழ் கத்தோலிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையார் டோகாவில் சாரதியாக பணியாற்றுகிறார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.