மக்கள் மயப்பட்ட எந்தவொரு விடுதலைப் போராட்டமும் தோற்றதாக வரலாறு இல்லை: சுவிஸ் தமிழர் பேரவை

தாயகத்தில் அல்லலுறும் எமது மக்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஐக்கிய நாடுகள் சபை எடுத்துச் செல்லும் வரையான கவனயீர்ப்பு போராட்டங்களை சுவிஸ் தமிழர் பேரவை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில் சுவிஸ் தமிழர் பேரவையினர் நாளை திங்கட்கிழமை (16.03.09) ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் நடாத்தப்படவுள்ள மாபெரும் பேரணிக்கான நோக்கத்தை தெளிவுபடுத்தி மக்கள் ஆதரவை திரட்டும் வகையில் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா இனவெறி அரசாங்கம், தனது நாசகார கூட்டாளிகளின் உதவியுடன் தமிழின அழிப்பை மிகவும் கொடூரமாகவும், ஈவிரக்கமின்றியும், கச்சிதமாகவும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் புலம்பெயர் உறவுகளாகிய நாம் எமது வரலாற்றுக் கடமையைச் செவ்வனே நிறைவேற்ற வேண்டிய தேவையுள்ளது.

தமிழின அழிப்பின் கோரத்தையும், வேகத்தையும் கண்டு உலக நாடுகள் திகைத்து நிற்கும் இன்றைய தருணத்தில் நாம் வீறு கொண்டெழுந்து நடாத்தப் போகும் சாத்வீக ரீதியிலான, ஜனநாயக வழிமுறைகளுக்கூடான போராட்டங்களே எமது விடுதலைப் போராட்டத்தினையும், இதுநாள் வரை எமது மக்கள் விடுதலைக்காகச் செய்த தியாகத்தின் அறுவடையையும் பெற்றுத்தர வல்லவை.

புலம்பெயர் தமிழர்களாகிய நாம் தொடர்ச்சியாக பல்வேறு வழிமுறைகளுக்கு ஊடாகவும் மேற்கொண்டு வரும் போராட்டத்தின் நிலைமை உலகத்தை எவ்வளவு தூரம் கவர்ந்துள்ளது என்பதை உற்று நோக்கி, அனைத்துலக சமூகம் தமிழரின் அரசியல் கோரிக்கைகள் தொடர்பான விடயத்தில் நல்லதொரு முடிவொன்றை எடுக்கும் வகையிலும் அந்த முடிவு தமிழரின் உரிமையையும் நிரந்தர பாதுகாப்பையும் தரவல்லதாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தொடர்ந்தும் போராட வேண்டியுள்ளது.

இன்று புலம்பெயர் தமிழ் உறவுகள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியொன்று ஏற்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

இந்த எழுச்சி, தனியே ஈழத் தமிழினத்தின் எழுச்சியாக மட்டுமன்றி உலகத் தமிழினத்தின் எழுச்சியாக மாறி வருகின்றமையையும் மகிழ்வுடன் நோக்க முடிகின்றது.

இந்த முன்வருகை மேலும் மேலும் உத்வேகம் பெறுகின்ற போது அதனை யாராலும் தடுத்து விட முடியாது.

சிங்களப் பேரினவாதிகளின் இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அனைத்துலகம் கவலை கொண்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட ஆலோசித்து வருகின்றது.

கண்டனங்களும் வெளியிடப்படுகின்றன. ஆனால், அவை சிங்களப் பேரினவாதிகளின் கோரச் செயலை தடுக்கக்கூடியவையாக இல்லை.

எனவே, உலகமெல்லாம் சிதறுண்டு வாழும் தமிழினமே தன்னினத்தின் உரிமைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் குரல் கொடுக்க வேண்டும்.

கொத்தணிக் குண்டுகளும் பல்குழல் எறிகணைகளும் நாளாந்தம் மழை போல பொழிகின்ற போது அவை நேரடியாக வன்னி வாழ் மக்களைப் பலியெடுத்து வருகின்றன.

ஆட்கொல்லிப் போராயுதங்களைப் பயன்படுத்தி மக்களைப் பலியெடுக்கும் சம காலத்திலேயே உணவும், மருந்தும் கூட ஆயதங்களாகப் பயன்படுத்தப் படுகின்றன.

வன்னி வாழ் மக்களின் வாழ்வையும் உயிரையும் பறித்தெடுத்து விட்டால் விடுதலைப் போராட்டம் உருக்குலைக்கப்பட்டு விடும் என்று சிறிலங்கா அரசாங்கம் தப்புக் கணக்குப் போடுகிறது.

சிறிலங்கா அரசாங்கத்தின் கணக்குத் தவறு என்று நாம் நிறுவ வேண்டுமானால் களத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் போராடுவதைத் தவிர வேறு வழியே இல்லை.

மக்கள் மயப்பட்ட எந்தவொரு விடுதலைப் போராட்டமும் தோற்றதாக வரலாறில்லை. போராட்டங்கள் மக்களால் தான் நடத்தப்பட முடியும்.

மறுபுறம், மக்கள் வேறு போராளிகள் வேறு என்று கூறி பிரித்தாளும் தந்திரோபாயத்திற்கு அமைவாக மக்களையும், போராளிகளையும் பிரிப்பதற்கான சதி முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது விடயத்தில் உண்மையினைப் புரிந்து கொள்வது ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

போராளிகள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் இல்லை. எந்த இனத்தின் உரிமைக்காகப் போராடுகின்றார்களோ அந்த இன மக்களின் பிள்ளைகளே அவர்கள்.

இப்படியிருக்கையில் போராளிகள் வேறு மக்கள் வேறு என்று எப்படிச் சொல்ல முடியும்.? தமிழர் இந்த உண்மையை ஐயம் களைந்து மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

போராளிகள் யார்? போராட்டக் கொள்கையின் உட்கிடக்கை என்ன? இதுவரையும் விடுதலைப் போராட்டத்தில் வெளிப்பட்ட ஆற்றல் என்ன? என்பவை பற்றிச் சிந்திப்பவர்கள், உண்மைகளைச் சரியாக உள்வாங்கிக் கொள்பவர்கள், எந்தச் சூழ்நிலையிலும் சலிப்படைய மாட்டார்கள்.

வன்னியியே இன்று அரங்கேறிவரும் அவலம் தமிழ் மக்களைக் காக்க வேண்டும் என்ற குரல்களை மட்டுமன்றி, தமிழ் மக்கள் விவகாரத்துக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்று காணப்பட வேண்டும் என்ற குரல்களையும் ஓங்கச் செய்துள்ளது.

இது விடயத்தில் தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய தேவையுள்ளது. முன்னைய சந்தர்ப்பங்களைப் போன்று அரைகுறைத் தீர்வுகளைத் தமிழ் மக்கள் தலையில் கட்டிவிடலாம் என ஒரு சிலர் கனவு காண்கிறார்கள். அதற்கு நாம் இடம் தந்துவிடக் கூடாது.

சிங்களத்தின் காலடியில் வீழுந்து கிடந்து, தருகின்ற எதையாவது ஏற்றுக்கொண்டு வாழ்வதற்குத் தமிழர்கள் தயாராக இல்லை என்பதை நாம் அனைத்துலக சமூகத்திற்குப் புரிய வைக்க வேண்டும்.

சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வொன்றே தனிநாட்டுக் கோரிக்கைக்கு மாற்றீடாகப் பரிசீலனைக்கு எடுக்கப்படக்கூடிய தீர்வென்பதையும் நாம் அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

இந்த இலக்குகளை நாம் எட்ட வேண்டுமென்றால் தமிழர் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். ஓரணியில் நின்று கொண்டு ஒரே இலக்குடன் முன்னேறுவோமானால் எமது இலட்சியங்களை வென்றெடுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

எனவே, இன்றே கரங் கோர்ப்போம் வாரீர்.
நாளை நமதாகட்டும்! தமிழர் வாழ்வு வளமாகட்டும்!!

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & thinks : puthinam

Leave a Reply

Your email address will not be published.