யுஸ் நெருக்கடி-கிலானி மிரட்டல்: பணிந்தார் சர்தாரி

இஸ்லாமாபாத்: பிரதமர் கிலானி, ராணுவ தளபதி கயானி மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை கொடுத்த நெருக்கடியைத் தொடர்ந்து இறங்கி வந்துள்ளார் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி. பல்வேறு சமரச நடவடிக்கைளை அவர் அறிவித்துள்ளார். இதனால் ராணுவப் புரட்சி ஏற்படும் அபாயம் சற்று தணிந்துள்ளது.

பாகிஸ்தான் அதிபராக பதவியேற்ற சர்தாரி திருப்திகரமான வகையில் நிர்வாகத்தை நடத்திச் செல்லவில்லை என்ற பெரும் குற்றச்சாட்டு பாகிஸ்தானில் உள்ளது.

தொடரும் தீவிரவாதத் தாக்குதல்களும் சேர்ந்து கொள்ளவே சர்தாரி கடும் விமர்சனத்திற்குள்ளானார்.

இந்த நிலையில் சிக்கலுக்கெல்லாம் உச்சகட்டமாக, சமீபத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது தம்பி சபாஷ் ஷெரீப் ஆகியோர் தேர்தல்களில் போட்டியிட பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.

இதனால் வெகுண்ட ஷெரீப் கட்சியினர் நாடு முழுவதும் பெரும் போராட்டத்தில் குதித்தனர். மேலும் பதவி நீக்கம் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் செளத்ரி, நீதிபதிகள் உள்ளிட்டோருக்கு மீண்டும் அதே பொறுப்பை வழங்க வேண்டும் என்று கோரி நேற்று முன்தினம் நடைபயணத்தையும் ஷெரீப் கட்சியினர் தொடங்கினர்.

இந்த நிலையில் சர்தாரியின் மீது அதிருப்தி அடைந்த பிரதமர் கிலானியும் அவருக்கு எதிராக திரும்பினார். உச்சகட்டமாக சர்தாரிக்கு கெடு விதித்தார் ராணுவ தலைமை தளபதி பர்வேஸ் கயானி.

நாட்டை சீர்படுத்த நடவடிக்கை எடுங்கள், இல்லாவிட்டால் ராணுவம் அந்த பொறுப்பை எடுத்துக் கொள்ளும் என கெடு விதித்து மிரட்டல் விடுத்தார் கயானி.

பாகிஸ்தான் நிலவரம் கலவரமாக மாறி வருவதைப் பார்த்த அமெரிக்காவும், இங்கிலாந்தும் களத்தில் குதித்தன. கிலானி, ஷெரீப் மற்றும் ராணுவ தளபதியுடன் பேசி சமரசம் ஏற்படுத்த முயற்சியுங்கள் என்று அவை அறிவுறுத்தின. மேலும் அமெரிக்க அரசு அதற்கு மேல் ஒரு படி மேலே போய் சர்தாரிக்கு 24 மணி நேர கெடுவும் விதித்தது.

ஆட்சி பறிக்கப்படும் அபாயம், நாடு கடத்தப்படும் அச்சுறுத்தல் வலுக்கவே தனது நிலையிலிருந்து இறங்கி வந்தார் சர்தாரி.

முதல் கட்டமாக ஷெரீப் சகோதரர்களுக்கு விவிஐபிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை அளிக்க உள்துறை அமைச்சகத்திறகு அவர் உத்தரவிட்டார்.

மேலும், பஞ்சாப் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட ஜனாதிபதி ஆட்சியை நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல தலைமை நீதிபதி இப்திகார் செளத்ரி உள்ளிட்ட பிற நீதிபதிகளை மீண்டும் பதவியில் நியமிக்கவும் சர்தாரி நடவடிக்கை எடுப்பார் எனத் தெரிகிறது.

கிலானியுடன் அவசர ஆலோசனை..

இந்ச் சூழ்நிலையில் நேற்று பிரதமர் கிலானியை அவசரமாக வரவழைத்து முக்கிய ஆலோசனையை நடத்தினார் சர்தாரி.

இந்த திடீர் சந்திப்புக்குக் காரணம், கிலானியை சந்தித்த ராணுவ தலைமைத் தளபதி கயானி விடுத்த மிரட்டல்தான். சர்தாரியிடம் சொல்லி நாட்டில் அமைதியை ஏற்படுத்த முயற்சியுங்கள். இல்லாவிட்டால் ஏற்படும் விளைவுகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு என கயானி கூறியுள்ளார்.

இதையடுத்தே கிலானியை வரவழைத்து ஆலோசனை நடத்தினார் சர்தாரி.

புரட்சி வராது..அமெரிக்கா நம்பிக்கை:

இதற்கிடையே, பாகிஸ்தானில் நிலைமை மோசமாக இருந்தாலும் கூட அங்கு ராணுவப் புரட்சி வராது என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க முப்படைகளின் தலைமைத் தளபதி மைக்கல் முல்லன் கூறுகையில், பாகிஸ்தான் தளபதி பர்வேஸ் கயானி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுடன் இருப்பவர். அவர் புரட்சி செய்ய மாட்டார் என கருதுகிறோம்.

முஷாரப் செய்தது போல அவர் செய்ய மாட்டார் எனவும் நம்புகிறோம். பாகிஸ்தான் அரசு நிர்வாகம் மிக மோசமாக செயல்படுவது குறித்து சில முறை என்னிடம் வருத்தத்தை வெளிப்படுத்தினார் கயானி. அப்போதெல்லாம் அவரை நான் சமாதானப்படுத்தினேன்.

கிட்டத்தட்ட பத்து முறை கயானியுடன் நான் பேசியிருக்கிறேன். பாகிஸ்தானுக்கு நல்லது செய்ய அவர் விரும்புகிறார். இருப்பினும் புரட்சி வரைக்கும் அவர் போக மாட்டார் எனவே நான் கருதுகிறேன் என்றார் முல்லன்.

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.