அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் ஊடகங்கள் – அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவது கண் தெரியவில்லையா?

சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் கொடுங்கோன்மையான இன அழிப்பு போரில் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகள், பாதுகாப்பு வலயப் பகுதிகள், விநியோக நிலையங்களின் மீது கூட தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த உண்மை செய்திகளை வெளியிட வேண்டிய கடைமை தமிழ் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கு இருக்கிறது.

ஆனால் அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் இந்த ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றன.

பெரும்பான்மையான ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக உள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

உண்மை செய்திகள் வெளிவந்தால் நம் குட்டு வெளிப்பட்டு விடும் என்று நினைக்கும் அரசியல்வாதிகள் பிற ஊடகங்களையும் விளம்பரங்கள் தர மாட்டோம் என்று சொல்லி மிரட்டுகிறார்கள்.

செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டால்தான் தாய் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு உண்மை நிலவரம் தெரிய வரும். இணைய தளங்களை பார்க்கும் வசதி சாதாரண மக்களுக்கு இல்லை.

டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்ற பேட்டியையும், புலிகளின் அழிவுச் செய்தியையும் முதல் பக்கத்தில் வெளியிடும் இந்த ஊடகங்களுக்கு அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவது கண் தெரியவில்லையா?. பாகிஸ்தானில், இராக்கில் குண்டு வெடிப்பையும், கிரிக்கெட் வீரர்கள் தாக்கப்பட்டதையும் பக்கம் பக்கமாக படங்களுடன் ஆராய்சிக் கட்டுரை வெளியிடும் இந்த ஊடகங்களுக்கு வன்னியில் பிஞ்சு குழந்தைகள் கொன்று குவிக்கப்படுவது தெரியவில்லையா?

சன் / ஜெயா தொலைக்காட்சிகளில் இராணுவம் வெளியிட்ட இடம் பெயர் மக்களின் மீது நடந்த குண்டு வெடிப்பை திரும்ப திரும்ப காட்டியவர்களுக்கு அப்பாவி மக்கள் கொல்லப்படும் கானொளிகள் கிடைக்க வில்லையா? 100க்கும் மேற்பட்ட சேனல்களை வைத்திருக்கும் சன் குழுமமும், கலைஞர் தொலைக்காட்சியும் இப்படி துரோகம் செய்தால் பிறகு எப்படி உண்மைகள் மக்களை சென்றடையும்? இன்னமும் சன் செய்திகளில் ராணுவம் வெளியிடும் கானொளிகள்தான் காண்பிக்கப்படுகின்றன.

புலம் பெயர் வாழ் தமிழர்களின் ஆதரவில் பணம் சம்பாதித்து கொழுத்துப்போய் உள்ள தினமலர், தினகரன் பத்திரிக்கைகள், சன் குழுமம், ஜெயா, கலைஞர் தொலைக்காட்சிகள் தொடர்ந்து தமிழின விரோத போக்கை கடைப் பிடித்து வருகின்றன.

சிங்களர்களும், சிங்கள அரசும் தொடர்ந்து பொய்ப்பிரச்சாரத்தை வேகமாக முன்னெடுத்து வருகிறார்கள். Youtube, Wikimapia, defence போன்றவற்றை பார்த்தால் அவர்களுடைய நோக்கம் புரியும். 8 கோடி தமிழ் மக்கள், எண்ணற்ற தொலைக்காட்சிகள், கட்டமைப்பு வசதிகளை தமிழர்கள் கொண்டுள்ள போதிலும் சிங்களர்கள் நம்மை விட வேகமாக முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே உலகத் தமிழ் சங்கங்கள், தமிழர்கள் அனைவரும் தமிழ் ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் வழிக்கு வருவார்கள். புலம் பெயர் தமிழர்கள், தமிழ் சங்கங்களின் ஆதரவு இல்லாமல் அவர்களால் பத்திரிக்கை / தொலைக்காட்சிகளை நடத்த முடியாது.

மக்கள் புரட்சியை தடுக்கும் நோக்கில் தமிழின துரோகத்தை செய்து வரும் இந்த ஊடகங்களுக்கு புலம் பெயர் வாழ் தமிழர்களும், தமிழ் சங்கங்களும் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

நடுநிலை தவறிய இந்த ஊடகங்களுக்கு தக்க பாடம் புகட்ட கீழ்க்கண்டவர்களுக்கு மின் அஞ்சல் மூலம் அழுத்தம் கொடுக்குமாறு அனைத்து தமிழ் சங்கங்களையும், புலம் பெயர் வாழ் தமிழர்களையும் மிகவும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். இதன் பிறகும் இந்த ஊடகங்கள் தங்களது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் அனைவரும் சேர்ந்து அவற்றை புறக்கணிக்க வேண்டுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.