பாதுகாப்பு வலய நிலை தொடர்பில் அமெரிக்க ஆழ்ந்த கவலை

வடபகுதியில் சிறிலங்கா அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தில் மோசமடைந்து வரும் நிலைமைகள் தொடர்பாகவும், அதிகரித்து வரும் பொதுமக்களின் இழப்புக்கள் தொடர்பாகவும் அமெரிக்காவின் ஆழ்ந்த கவலையை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு வெளிப்படுத்தியுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலறி கிளிண்டன், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் சிறிலங்கா படையினர் தாக்குதலை நடத்தக்கூடாது எனவும் வலியுறுத்தியிருக்கின்றார்.

சிறிலங்கா அரச தலைவருடன் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு உரையாடியபோதே இதனை அவர் வலியுறுத்தியதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவுக்கும் ஹிலறி கிளிண்டனுக்கும் இடையிலான இந்தத் தொலைபேசி உரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.

இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும் என அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டுக்கொண்ட ஹிலறி, போர் நடைபெறும் பகுதிக்கும், இடம்பெயர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் என்பனவற்றுக்கு மட்டுமன்றி இடம்பெயர்ந்தவர்களை விசாரணைகளுக்கு உட்படுத்தும் நிலையங்களுக்கும் அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்கள் சென்று வருவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றார்.

அனைத்து சமூகங்களினதும் நியாயமான அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்பதன் மூலமாகவே நிரந்தரமானதும், இறுதியானதுமான தீர்வு ஒன்றைக் காணக்கூடியதாக இருக்கும் என அமெரிக்கா நம்புவதாகவும் ஹிலறி கிளிண்டன் இந்தத் தொலைபேசி உரையாடலின் போது குறிப்பிட்டிருக்கின்றார்.

இதேவேளையில் இந்தத் தொலைபேசி உரையாடல் தொடர்பாக சிறிலங்காவின் இணையத்தளங்கள் சிலவற்றில் திரிவுபடுத்தப்பட்ட செய்திகள் வெளியாகியிருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய பிரிவு அதிகாரியான டியானி கெலி தெரிவித்திருக்கின்றார்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.