மனைவி மீது கோபம் – 4 நாட்களே ஆன குழந்தையைக் கொன்ற சாப்ட்வேர் என்ஜீனியர்

சென்னை: மனைவி தனது பேச்சைக் கேட்காமல் குழந்தை பெற்றுக் கொண்டதால் கோபமடைந்த என்ஜீனியர், பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தையை கிணற்றில் போட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ளார். அந்த ஈவு இரக்கமன்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நெஞ்சை உறைய வைக்கும் இந்த சம்பவம் குறித்த விவரம்..

சென்னை சூளைமேடு சண்முகநாதர் ரோட்டில் வசிப்பவர் சண்முகசுந்தரம். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜகுமாரி. அரசு பொது மருத்துவமனையில் நர்ஸ் ஆக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன், ஒரே மகள் உள்ளனர். மூத்த மகன் மற்றும் மகள் அமெரிக்காவில் உள்ளனர். இளைய மகன் நிரஞ்சன் குமார். 29 வயதான இவர் எம்.இ முடித்தவர். பெங்களூரில் உள்ள சிஸ்கோ நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. பெரும் பொருட் செலவில், மிகப் பெரிய வரதட்சணையுடன் தனது மகளை நிரஞ்சன் குமாருக்குக் கட்டிக் கொடுத்தார் சங்கீதாவின் தந்தை பாலசுப்ரமணியம்.

திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் பெங்களூர் சென்றார் சங்கீதா. இனிய இல்லறம் தொடங்கியது. இதன் விளைவாக சங்கீதா கர்ப்பம் தரித்தார். ஆனால் இதை நிரஞ்சன் குமார் விரும்பவில்லை. இப்போது குழந்தை வேண்டாம், 2 ஆண்டுகள் கழியட்டும், இப்போது கலைத்து விடு என்று கூறியுள்ளார்.

ஆனால் கர்ப்பத்தைக் கலைக்க மறுத்து விட்டார் சங்கீதா. இதனால் அவருக்கும், கணவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வில்லிவாக்கத்திற்கு வந்து விட்டார் சங்கீதா.

அன்று முதல் பெற்றோருடன் இருந்து வந்தார் சங்கீதா. அவர் சென்னைக்கு வந்தது முதல் நிரஞ்சன் குமார் அவருடன் பேசவே இல்லை என்று தெரிகிறது. பலமுறை சங்கீதா முயற்சித்தும் நிரஞ்சன் குமார் பேசவில்லை.

இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சங்கீதாவுக்கு பிரசவம் நடந்து பெண் குழந்தை பிறந்தது. புதன்கிழமை பெற்றோர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் அங்கு வந்த நிரஞ்சன் குமாரின் தந்தையும், தாயும், தங்களது வீட்டுக்கு வருமாறு வற்புறுத்தினர். இதையடுத்து சங்கீதா குழந்தையுடன் மாமியார் வீடு சென்றார்.

பின்னர் நிரஞ்சன்குமாரும் பெங்களூரிலிருந்து வந்தார். இதனால் சங்கீதா மகிழ்ச்சி அடைந்தார். நேற்று அதிகாலை சங்கீதாவுக்கு விழிப்பு வந்து கழிப்பறைக்குச் சென்றார். அப்போது அருகில் படுத்திருந்த குழந்தையைக் காணாமல் திடுக்கிட்டார்.

உடனே மாமனார், மாமியாரை எழுப்பிக் கேட்டபோது தங்களுக்கு தெரியவில்லையே என்று கூறினர். கணவரிடம் கேட்டபோது, எந்தவித சலனமும் இல்லாமல் ஆமாம், நான்தான் குழந்தையை கிணற்றில் போட்டுக் கொன்று விட்டேன் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அலறி அடித்தபடி கிணற்றுக்கு ஓடினார் சங்கீதா. அங்கே அந்த பச்சிளம் குழந்தை பிணமாக மிதந்த காட்சியைப் பார்த்து அலறித் துடித்தார்.

தகவல் அறிந்துதம் சங்கீதாவின் பெற்றோர், சகோதரர்கள் அங்கு ஓடி வந்தனர். அக்கம் பக்கத்தினரும் திரண்டு விட்டனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து குழ்நதையின் உடலை மீட்டனர்.

போலீஸாரும் விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நிரஞ்சன் குமார் கைது செய்யப்பட்டார்.

போலீஸாரிடமும் எந்தவித மன உறுத்தலோ, மனிதத்தனமோ இல்லாமல் வாக்குமூலம் அளித்துள்ளார் நிரஞ்சன் குமார். 2 பேரும் சந்தோசமாக வாழ்ந்துவிட்டு, அதன்பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று எவ்வளவோ கூறினேன். என் விருப்பத்தை மீறி என் மனைவி குழந்தை பெற்றுக்கொண்டார். விருப்பமில்லாமல் பிறந்த குழந்தையை நான் கொலை செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார் நிரஞ்சன் குமார்.

சங்கீதா குமுறல்..

தனது கணவர் மீது சங்கீதா போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதில், எனது கணவர் சைக்கோ மனப்பான்மை உடையவர். திருமணத்திற்கு முன்பே மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

வசதியான குடும்பம் என்பதால், எனது பெற்றோரும் அவசரப்பட்டு என்னை திருமணம் செய்து கொடுத்து விட்டனர். திருமணமாகி அவர் ஒருநாள்கூட என்னிடம் சந்தோசமாக வாழ்க்கை நடத்தியது இல்லை.

நான் கருவுற்றவுடன் அந்த செய்தியை சந்தோசமாக சொன்னேன். உடனே அவர் நமக்கு இப்போது குழந்தை வேண்டாம். குழந்தையை அழித்துவிடு என்று சொன்னார். மேலும், உடனடியாக ஒரு வேலையை தேடிக்கொள் என்றும் கூறினார்.

குழந்தை இறைவன் கொடுத்த செல்வம், அதை நான் ஒருபோதும் அழிக்கமாட்டேன் என்று நான் உறுதியாக கூறிவிட்டேன். கருவை கலைக்க வேண்டுமென்று தொல்லை கொடுத்து வந்தார். இதுபற்றி எனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தேன். உடனே அவர்கள் என்னை சென்னைக்கு அழைத்து வந்துவிட்டனர்.

சென்னைக்கு வந்தபிறகு எனது கணவர் என்னிடம் ஒருநாள்கூட போனில் பேசவில்லை. என்னை வந்து பார்க்கவும் இல்லை. இ-மெயில் அனுப்பினேன். அதற்கும் அவர் பதில் அனுப்பவில்லை.

குழந்தை பிறந்தபிறகு அவருடன் செல்போனில் பேச முயற்சித்தேன். செல்போனை ஆப் செய்து விட்டார். குழந்தை பிறந்த 4-வது நாளில் எனது மாமனார், மாமியார் வற்புறுத்தியதால் அவர்களது வீட்டுக்கு வந்தேன். எனது மாமனார், மாமியார் கேட்டுக்கொண்டதன்பேரில், எனது கணவரும் பெங்களூரில் இருந்து வந்தார். ஆனால், என்னிடம் எந்தவித தகராறும் செய்யவில்லை. அதேநேரத்தில் குழந்தையையும் அவர் கையால் தொடவில்லை.

திடீரென்று இரவு 11 மணியளவில் குழந்தையை கையில் தூக்கி வைத்துக்கொண்டு முத்தம் கொடுத்து கொஞ்சினார். நானும் அவர் மனம் மாறி விட்டார் என்று சந்தோசப்பட்டேன்.

நான் தூங்கும்போது வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் குழந்தையை தூக்கிப்போட்டு கொலை செய்து இருக்கிறார். இனிமேல் அவரோடு வாழமாட்டேன். அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவரை சும்மா விடக் கூடாது. தூக்கில் தொங்க விட வேண்டும் என்று கூறியுள்ளார் சங்கீதா.

பேரனை பரிதாபமாக இழந்து பெரும் சோகத்துடன் காணப்பட்ட சங்கீதாவின் தந்தை பாலசுப்ரமணியம் கதறியபடி கூறுகையில்,

எனது மகள் திருமணத்திற்காக ரூ.15 லட்சம் நாங்கள் செலவு செய்தோம். முதலிரவுக்கு எங்கள் வீட்டுக்கு வந்ததோடு சரி, பிறகு நிரஞ்சன்குமார் எங்கள் வீட்டுக்கு வரவில்லை.

தலைதீபாவளி விருந்துக்கு கூப்பிட்டோம். ரூ.5 லட்சம் கொடுத்தால்தான் தலைதீபாவளி விருந்தில் கலந்து கொள்வேன் என்றும் நிரஞ்சன்குமார் கூறிவிட்டார்.

அவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்போல் இருப்பார். பண ஆசை பிடித்தவர். வேலைக்கு போய் சம்பாதிக்கவேண்டும் என்று எனது மகளுக்கு பெரும் தொல்லை கொடுத்து வந்தார்.

குழந்தை பெற்ற பிறகு ஒரு ஆண்டு கழித்து நான் வேலைக்கு போகிறேன் என்று எனது மகள் எவ்வளவோ சொல்லி பார்த்தாள். ஆனால், குழந்தையை விரும்பாத அவர், கொலை செய்யும் அளவுக்கு போவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

எனது மகள் கர்ப்பம் அடைவதற்கு முன்பு நிரஞ்சன்குமார் அம்மை நோயால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு தான் எனது மகள் கர்ப்பம் அடைந்தார். இதை ஒரு அபசகுணம் என்றும், எனவே இந்த குழந்தை வேண்டாம் என்றும் நிரஞ்சன்குமார் சொல்லி வந்தார்.

குழந்தையை வேண்டாம் என்று எங்களிடம் கொடுத்திருந்தால்கூட, நாங்கள் வளர்த்திருப்போம். 10 மாதம் சுமந்த குழந்தையை அநியாயமாக கொன்றுவிட்டாரே என்று கதறி அழுதார்.

படித்த நபரே இப்படி மிருகத்தனமாகவும், முட்டாள்தனமாகவும் நடந்து கொண்ட செயல் அப்பகுதியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source & Thanks : atstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.