வாசனுடன்-தயாநிதி சந்திப்பு: தங்கபாலு, இளஙேகோவனுக்கு திமுக ‘செக்’!

சென்னை: திமுகவுடன் காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனை, திமுக முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனை ரகசியமாக சந்தித்துப் பேசினார்.

சென்னை அசோகர் சாலையில் உள்ள வாசனின் இல்லத்தில் இச் சந்திப்பு நடந்தது. அப்போது தனது கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வாசன் திமுகவிடம் தந்ததாகத் தெரிகிறது.

திமுகவுடன் பேச்சு நடத்த அமைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம், வாசன், இளங்கோவன் ஆகிய மத்திய அமைச்சர்கள், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டமன்ற கட்சித் தலைவர் சுதர்சனம் அடங்கிய குழு நேற்று முன் தினம் அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக குழுவை சந்தித்துப் பேசியது.

அப்போது தங்களுக்கு 20 தொகுதிகள் வரை காங்கிரஸ் கேட்டது. இந்தப் பட்டியலில் தமிழ் மாநில காங்கிரசில் இருந்து காங்கிரசில் இணைந்த தனது ஆதரவாளர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை அதிகமாக ஒதுக்குமாறு தயாநிதியிடம் வாசன் கோரிக்கை வைத்ததாகத் தெரிகிறது.

தங்கபாலு எப்போதுமே அதிமுகவுக்கு நெருக்கமானவர் என்பதாலும், இளங்கோவனும் இந்த முறை மறைமுகமாக அதிமுக கூட்டணியை ஆதரித்தார் என்பதாலும், அதே நேரத்தில் எப்போதும் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் வாசனுக்கு முடிந்தவரை உதவ திமுகவும் முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.

இதனால் தான் முதல்வரின் அனுமதியுடனேயே வாசனை தயாநிதி சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் நிர்வாகிகளில் வாசன் ஆதரவாளர்களே அதிகம் என்பதும், இன்னும் இவர்கள் த.மா.கா அணியாகவே செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

வாசனைப் பொறுத்தவரை காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழுவிடம் காரியம் சாதிப்பதை விட தனக்கு மிக நெருக்கமாக உள்ள திமுகவிடம் தனக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்வது எளிது என்கிறார்கள்.

அதிக அளவிலான தொண்டர்கள், நிர்வாகிகளை தன் வசம் வைத்துள்ள வாசனுக்கு எரிச்சலூட்ட காங்கிரஸ் தலைமையும் தயாராக இல்லை.

இதனால் அவர் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத்திடம் தெரிவித்துவிட்டே தயாநிதியை சந்தித்தார் என்கின்றனர் வாசன் தரப்பினர்.

வாசன் அணியினர் எத்தனை தொகுதிகளில் போட்டியிட விரும்புகின்றனர், எந்தெந்த தொகுதிகளைப் பெற விரும்புகின்றனர் என்ற விவரங்களை அப்போது தயாநிதி கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

வாசன் தந்துள்ள பட்டியலை மனதில் கொண்டே, இனி காங்கிரஸ் குழுவுடன் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு பேச்சு நடத்தும் என்கிறார்கள்.

வாசன் தந்துள்ள பட்டியலில் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் கோரும் தொகுதிகளும் இடம் பிடித்துள்ளதாகத் தெரிகிறது.

இதன்மூலம் தங்கபாலு, இளங்கோவன் தரப்புக்கு திமுக செக் வைக்கும். இதனால் இந்தத் தலைவர்கள் கடும் எரிச்சலில் உள்ளனர்.

கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக எஸ்ஆர்பி:

தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் தனது பெயரும் நிச்சயம் இடம் பெறும் என்று எதிர்பார்த்தார் மூத்த காங்கிரஸ் தலைவரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம். ஆனால், அவரை தலைமை ஒதுக்கிவிட்டது.

எஸ்.ஆர்.பி., வாசன் கோஷ்டியில் இருந்தாலும் இப்போது இருவருக்கும் இடையே முந்தைய நெருக்கம் இல்லை. இதனால் கோபத்தில் இருந்த எஸ்ஆர்பியை கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தேர்தல் பொறுப்பாளராக காங்கிரஸ் தலைமை நியமித்து அவரை சமாதானப்படுத்தியுள்ளது.

மனைவிக்கு இடம் தந்த தங்கபாலு:

திமுகவிடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும் முன் மக்களவைத் தேர்தல் முடிவுகளை இனி செயற்குழுதான் முடிவு செய்யும் என்று அறிவிதிதிருந்தார் தங்கபாலு. அதில் பொதுக் குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.

சிறப்பு அழைப்பாளர்கள் பட்டியலில் தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி பெயரும் இருந்தது. இதை வாசன், இளங்கோவன் தரப்பு கடுமையாக எதிர்த்தததால் தான் குலாம் நபி ஆசாத் தலையிட்டு சிதம்பரம், சுதர்சனம் ஆகியோர் அடங்கிய குழுவை அறிவி்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.