14 வயது சிறுமியிடமிருந்து விவாகரத்து கேட்கும் 17 வயது சிறுவன்

சென்னை: என்னை கட்டாயப்படுத்தி 14 வயது பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துவிட்டனர். என்னை இந்த திருமண பந்தத்தில் இருந்து விடுவியுங்கள என கேட்டு 17 வயது சிறுவன் கோரிக்கை விடுத்துள்ளான்.

வெளிநாட்டு சமாச்சாரமல்ல இது. நம்ம சென்னையில்தான் இந்த கூத்து.

சென்னை உள்ளகரம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர். 17 வயதான இவர் குடும்ப வறுமை காரணமாக 10வதுடன் படிப்பை நிறுத்த நேரிட்டது. பின்னர் அருகிலிருந்த இன்டர்நெட் மையத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவரது குடும்பத்தினர் அவரது விருப்பத்துக்கு மாறாக மாமா மகளான 14 வயது வானதி என்ற சிறுமியுடன் திருமணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதற்கு ஜெய்சங்கர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், அந்த பெண்ணின் பெற்றோர் அவரை கடுமையாக மிரட்டியுள்ளனர். இதையடுத்து திருமணம் கடந்தாண்டு இறுதியில் நடந்துள்ளது.

இந்நிலையில் ஜெய்சங்கர் போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில், குடும்ப சூழ்நிலையை காரணம்காட்டி எனது பெற்றோர் எனது மாமா மகள் வானதிக்கும் எனக்கும் திருமண ஏற்பாடு செய்தனர். அந்த பெண் எங்கள் பகுதியில் உள்ள கருணாநிதி தெருவில் வசித்து வந்தார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வானதிக்கு 14 வயதுதான் ஆகிறது.

எங்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி கோயிலில் திருமணம் முடிந்தது. எனது மற்றும் அந்த பெண்ணின் பெற்றோர்கள் இந்த திருமணத்துக்கு என்னை வற்புறுத்தியதோடு மட்டுமில்லாமல் திருமண உறவை முறிக்க கூடாது என மிரட்டினர். சோழிங்கநல்லூரை சேர்ந்த டேவிட் என்ற ரவுடியை அழைத்து வந்து அச்சுறுத்தினர்.

தற்போது நான் எந்த வேலையும் பார்க்கவில்லை. நான் தமிழகத்தை விட்டு வேறு இடத்துக்கு சென்று நன்றாக சம்பாதித்து என் மனதுக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். என்னை மிரட்டிய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், இப்படி ஒரு புகார் வருவது இதுவே முதல் முறை. வழக்கமாக மைனர் பெண்கள் தான் திருமணத்துக்கு வற்புறுத்தப்படுவார்கள். ஆனால் இந்த வழக்கில் திருமண ஜோடி இருவரும் மைனராக இருக்கின்றனர். புகாரில் பெற்றோர்கள் குற்றவாளியாக இருக்கிறார்கள். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.