இந்திய மருத்துவக் குழுவின் வருகைக்கு எதிராக இலங்கை அரச வைத்தியர்கள் போர்க்கொடி!

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக இந்திய வைத்தியர்கள் குழு இலங்கை வந்துள்ளமைக்கு இலங்கை அரச வைத்தியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இலங்கை வைத்திய கவுன்ஸிலில் பதியப்படாத வைத்தியர்கள் இங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது இலங்கை வைத்திய சட்டத்தை மீறும் செயலாகும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அச்சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜிசாந்த தகாநாயக்கவே இதைத் தெரிவித்தார். அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:

இலங்கை, வைத்தியத்துறையில் இந்தியாவை விடவும் உயர்ந்த நிலையில் உள்ளது. இப்படியானதொரு சந்தர்ப்பத்தில் வன்னி அகதிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்திய வைத்தியர்கள் குழு இலங்கைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வைத்திய கவுன்ஸிலில் பதியப்படாத வைத்தியர்கள் இலங்கை மக்களுக்கு சிகிச்சையளிக்க முடியாது. அப்படிச் செய்தால் அது வைத்திய சட்டத்தை மீறுவதாக அமையும்.

இந்தியாவோ அல்லது பிற நாடுகளோ விரும்பினால் இலங்கைக்கு மருந்துப் பொருள்களை வழங்கலாம் ஆனால் சிகிச்சையளிக்க முடியாது.

அதேவேளை, அந்த வைத்தியர்கள் எந்தளவுக்குத் திறமைசாலிகள் என்று எமக்குத் தெரியாது. அவர்களின் திறமையை எமது அரசு சோதித்துப் பார்க்கவில்லை.
இடம்பெயர்ந்தவர்கள் வவுனியாவில்; இந்திய வைத்தியர்கள் புல்மோட்டையில் ஏன்?

இந்திய அரசுதான் அவர்களைத் தெரிவுசெய்து அனுப்பியுள்ளது. எமது அரசு அவர்களைக் கண்மூடித்தனமாக வரவேற்று எமது நாட்டு மக்களுக்கு சிகிச்சையளிக்க அனுமதித்துள்ளது.

இடம்பெயர்ந்து வரும் வன்னி மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கே இந்த வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அவர்கள் புல்மோட்டையில் முகாமிட்டுள்ளனர்.

புல்மோட்டை இல்மனைட் கனியவளத்திற்குப் பெயர்போனது. அதனால், இந்த வைத்தியர்கள் புல்மோட்டையில் முகாமிட்டிருப்பது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் வவுனியாவில் தங்கியிருக்கும்போது ஏன் இந்த வைத்தியர்குழு புல்மோட்டையில் தங்கியிருக்கின்றது?

இந்த வைத்தியர்கள் எமது நாட்டுக்கு வருவதன் மூலம் எமக்குப் பாதகமே ஏற்படும் என்று கூறி அந்தப் பாதகத்தைத் தெளிவாக விளக்கி சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருக்கின்றோம்.

ஆனால், சுகாதார அமைச்சர் இதையெல்லாம் கணக்கில் எடுக்கமாட்டார். அவர் நினைத்ததைத்தான் செய்வார். இதனால், அவருடன் பேசிப்பயனில்லை என்றார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.