அம்பாறையில் சுதந்திரக் கட்சியின் மினி முகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்: 4 பேர் பலி

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை பகுதியில் சிறிலங்கா படையினருடன் சேர்ந்து இயங்கும் முரளிதரன் குழுவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மினி முகாம் மீது இன்று அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்மாந்துறையில் உள்ள சொறிக்கல்முனையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2:50 நிமிடமளவில் நடைபெற்ற தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் ரி-56 ரக துப்பாக்கிகள் மூன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட விடுதலை புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தாக்குதலுக்கு உள்ளான குறித்த ஆயுதக் குழுவின் மினி முகாம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டு அமைச்சுப் பொறுப்புக்களை பெற்றுள்ள முரளிதரனின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

கடந்த சனிக்கிழமை (07.03.09) சந்திரகாந்தன் குழுவிடம் இருந்து ஆயுதக் களைவு என்ற நாடகத்தை சிறிலங்கா அரசாங்கம் அரங்கேற்றியது.

இந்நிலையில் குறித்த ஆயுதக் குழுவின் அலுவலகம் ஒன்றில் இருந்து விடுதலைப் புலிகள் ஆயுதங்களை எடுத்துச் சென்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பது மகிந்த அரசின் போலியான செயற்பாடுகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் செயல்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அமைச்சு பொறுப்புக்களையும் பெற்று அரச அதிகாரத்தையும், ஆயுத பலத்தையும் முடியுமான வரை பயன்படுத்தி முரளிதரன் தமிழ் மக்கள் மீது மிகக்கடுமையான ஆயுத வன்முறை பிரயோகித்து வருகின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் ஆயுதக் குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் களையப்பட்டன என்பது மகிந்த அரசாங்கத்தின் ஒரு போலி நாடகம் என்பதை அனைத்துலக நாடுகளுக்கு வெளிக்காட்டவே இத்தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தியிருக்கலாம் என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுதக் குழுக்களுக்கு ஜனநாயக முலாம் பூசி அனைத்துலக நாடுகளை ஏமாற்றுவதற்காகவே ஆளும் தரப்பு கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் முரளிதரனின் இணைக்கப்பட்டிருக்கின்றார் என்றும் அவதானிகள் கூறுகின்றனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஒரு ஆயுதக் குழுதான் என்பதையும் மகிந்த அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள் எடுத்துக் காட்டுக்கின்றன என்றும் அவதானிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.