தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் வெளிமாநிலங்களுக்கு விற்க தடை

தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு விற்பதைத் தடை செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.மின்வாரிய தலைவர் சி.பி.சிங் அளித்த பேட்டி:

நமது மின் தேவையில் 49-சதவீதத்தை வாரியத்தின் மின் உற்பத்தி மூலமும்,51-சதவீதத்தை தனியாரிடம் இருந்து வாங்குவதன் மூலமும் ஈடுகட்டி வருகிறோம்.தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஆண்டுதோறும் 19-ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது.ஆனால்,25-ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது.2008-09ம் ஆண்டில் 6,000-கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மின் தட்டுப்பாட்டைப் போக்க,அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலையில் உள்ளதால்,அடுத்த ஆண்டில் இந்த இழப்பு மேலும் 10-சதவீதம் அதிகரிக்கும்.மின்வாரியம் இழப்பைச் சந்தித்தாலும் மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை.

கடந்த அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை மாதந்தோறும் 120-கோடி ரூபாய்,மின்சாரம் வாங்குவதற்காக கூடுதலாக வாரியம் செலவு செய்துள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் இது 225-கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இந்த மாதம் இது 250-கோடி ரூபாயாக உயர வாய்ப்புள்ளது.

மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக 35-ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இதன் மூலம் அடுத்த மூன்றாண்டில் 8,000-மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

தமிழகத்தில் மின் உற்பத்தியில் ஈடுபடும் தனியார் உற்பத்தியாளர்கள்,தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மின்வாரியம் மற்றும் தமிழக நிறுவனங்களுக்கு மட்டும் வழங்க வேண்டும்.வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்வதை தடை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.இவ்வாறு சிங் தெரிவித்தார்.

Source & Thanks : newlankasri

Leave a Reply

Your email address will not be published.